Jumma Masjid Protest : நுபுர் ஷர்மா பேச்சு.. டெல்லி ஜும்மா மசூதியில் போராட்டம்.. 1500 பேர் மீது வழக்குப் பதிவு செய்த டெல்லி காவல்துறை!
முகமது நபி குறித்து பாஜக தலைவர்கள் மேற்கொண்ட சர்ச்சைப் பேச்சுகளைக் கண்டித்து டெல்லி ஜும்மா மசூதியில் நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டெல்லி ஜும்மா மசூதியில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை முடிவடைந்த பிறகு, முகமது நபி குறித்து பாஜக தலைவர்கள் மேற்கொண்ட சர்ச்சைப் பேச்சுகளைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டெல்லி ஜும்மா மசூதியில் நேற்று வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை முடிவடைந்த பிறகு, போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, டெல்லி பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நவீன் ஜிண்டால் ஆகியோரைக் கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய டெல்லி காவல் ஆணையர் ஷ்வேதா சௌகான் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசுப் பணியாளரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மத்திய டெல்லி காவல் ஆணையர் ஷ்வேதா சௌகான் பேசிய போது, `ஜும்மா மசூதியின் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை முடிவடைந்த பிறகு சுமார் 1500 பேர் கூடினர். தொழுகை அமைதியாக முடிந்த போதும், சிலர் வெளியில் வந்து பதாகைகளைக் காட்டியதோடு, முழக்கங்களையிட்டுள்ளனர். மேலும் சிலர் அவர்களோடு இணைந்து எண்ணிக்கை அதிகரித்தது’ எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், `ஜும்மா மசூதியின் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது காவல்துறையினர் எப்போதும் அங்கு பணியில் இருப்பார்கள்.. அதனால் போராட்டக்காரர்கள் வெறும் 10 முதல் 15 நிமிடங்களிலேயே கலைக்கப்பட்டு, அமைதியான சூழல் உருவாக்கப்பட்டது.. இந்த நிகழ்வு தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.. இதுகுறித்து தொடர்புடைய சிலரைக் கைது செய்துள்ளதோடு, மற்றவர்களையும் அடையாளம் காண எங்கள் குழுக்கள் பணியாற்றி வருகின்றனர்’ எனவும் கூறியுள்ளார்.
ஜும்மா மசூதியின் ஷாஹி இமாம் சையது அகமது புஹாரி போராட்டத்திற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனக் கூறியதோடு, `போராட்டக்காரர்கள் யாரென்பது யாருக்கும் தெரியாது’ எனக் கூறியதோடு, அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் பாஜக தலைவர்களின் வெறுப்புப் பேச்சுகளைக் கண்டித்து சவூதி அரேபியா, குவைத், கத்தார், ஈரான் முதலான நாடுகளில் மக்கள் போராட்டமும், அழுத்தமும் நிகழ்ந்ததையடுத்து, பாஜகவில் இருந்து நுபுர் ஷர்மா இடைநீக்கம் செய்யப்பட்டார். நவீன் ஜிண்டால் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். மேலும், பாஜக அனைத்து மதங்களையும் மதிப்பதாகவும் செய்திக் குறிப்பு வெளியிட்டிருந்தது.
மத நம்பிக்கைகளைப் புண்படுத்துவதாகக் கூறி டெல்லி காவல்துறையினர் இதுவரை 31 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில் அய்மிம் கட்சித் தலைவர் அசாதுத்தீன் ஒவைசி, இந்து மதச் சாமியார் யதி நர்சிம்மானந்த், பாஜக தலைவர் நுபுர் ஷர்மா முதலானோர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.