Delhi: டெல்லியை அதிர வைத்த நிலநடுக்கம்: பதறி போய் முதல்வர் கெஜ்ரிவால் போட்ட ட்வீட்...!
டெல்லியில் நிலநடுக்கம் உணரப்பட்ட சூழலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசிய தலைநகரில் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக நம்புகிறேன் என ட்விட்டரில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நிலநடுக்கம் உணரப்பட்ட சூழலில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசிய தலைநகரில் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக நம்புகிறேன் என ட்விட்டரில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நேபாளத்தின் மேற்கே டோடி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அந்நாட்டின் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், நேபாளத்தின் மேற்கே நேற்றிரவு 9.07 மணியளவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அதே பகுதியில் இரவு 9.56 மணியளவில் 4.1 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன்பின்னர் இன்று அதிகாலை 2.12 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.3 அலகுகளாக பதிவானது. இதில் வீடு இடிந்து 3 பேர் உயிரிழந்தனர்.
இது கைராகாவன் பகுதியில் ஏற்பட்டு உள்ளது. இதன் தாக்கம் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பிற பகுதிகளிலும் உணரப்பட்டன.
நேற்று நள்ளிரவு முடிந்து, அதிகாலை தொடங்கிய நேரத்தில், தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தோர், அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு, குழந்தைகளுடன் வெளியே ஓடி வரும் அளவுக்கு பெரும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. நிலநடுக்கவியல் மைய தகவலின்படி, ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற அளவில் ஏற்பட்ட வலுவான நில நடுக்கத்தின் அதிர்வுகள்தான், டெல்லியில் உணரப்பட்டன என்பது தெரியவந்துள்ளது.
தலைநகர் டெல்லி, அதன் சுற்றுப்புற நகரங்களான நொய்டா, குருக்ராம், காஜியாபாத் உள்ளிட்ட பல பகுதிகள் , நேற்று நள்ளிரவில் சரியாக இரவு 1.58 மணியிலிருந்து 2.08 மணி வரை பெரும் பரபரப்புக்கு உள்ளானது. வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் திடீரென அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதற்குக் காரணம், நேபாள நாட்டின் எல்லைப்பகுதியை மையமாக வைத்து பதிவான நில நடுக்கம்தான்.
தரைக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில், ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள்தான், டெல்லி, லக்னோ உள்ளிட்ட பல வடமாநில நகரங்கள் மற்றும் ஊரகப்பகுதிகளில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளன. சுமார் 3 முதல் 10 வினாடிகள் வரை இந்த நில அதிர்வுகள் டெல்லியில் உணரப்பட்டுள்ளன. ஆனால், இந்த நில அதிர்வு ஏற்படுத்திய பயத்தால், விடியற்காலை வரை, பொதுமக்கள் தங்கள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, வீதிகளில் நின்றுக் கொண்டிருந்ததாக, டெல்லிவாசிகள் தெரிவித்தனர்.
இந்த சூழலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசிய தலைநகரில் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக நம்புகிறேன் என ட்விட்டரில் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நேபாளத்தில் மூன்று நிலநடுக்கங்கள் பல பகுதிகளில் நிலச்சரிவைத் தூண்டியபோது டெல்லி பகுதியில் இருந்து இதுவரை எந்த சேதமும் பதிவாகவில்லை. கடந்த சில மாதங்களாக, இந்தியாவின் உத்தராகண்ட் மற்றும் நேபாள எல்லைப்பகுதிகள் அருகில் உள்ள இமாலய மலைப்பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கங்கள் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.