டெல்லி கொலை வழக்கில் திருப்பம்...காதலியை வெட்டிய பிறகு என்ன நடந்தது? உண்மையை கண்டறியும் சோதனைக்கு நீதிமன்றம் அனுமதி
தவறான தகவல்களை அளித்து காவல்துறை விசாரணையை திசை திருப்புவதாக காவல்துறை தரப்பு அவர் மீது சந்தேகிக்கிறது.
டெல்லியில் அரங்கேறிய கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண்ணை அவரது காதலனே கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி எறிந்த சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
அப்தாப் அமீன் பூனவல்லா என்பவருக்கும் அவரது லிவ்-இன் காதலி ஷ்ரத்தாவுக்கும் கடந்த மே 18ஆம் தேதி சண்டை நிகழ்ந்துள்ளது. அதன் பிறகு, ஷ்ரத்தாவின் கழுத்தை நெரித்து அவர் கொலை செய்துள்ளார். பின்னர், அவர் தனது உடலை 35 துண்டுகளாக வெட்டி அவற்றை வைக்க குளிர்சாதன பெட்டியை வாங்கி உள்ளார்.
வேறு யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு உடல் பாகத்தையும் ஒவ்வொரு நாள் இரவு எடுத்து சென்று டெல்லியைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் எறிந்துள்ளார். இதற்காக, தினமும் அதிகாலை 2 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி உடல் பாகங்களை அப்புறப்படுத்தி உள்ளார். 26 வயதான ஷ்ரத்தா மும்பையில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கான கால் சென்டரில் பணிபுரிந்து வந்துள்ளார்.
அங்கு அவர் பூனாவல்லாவை சந்தித்துள்ளார். இருவரும் டேட்டிங் செய்ய ஆரம்பித்து ஒரே வீட்டுக்கு குடியேறினர். அவர்களது உறவுக்கு அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்காததால் இருவரும் அங்கிருந்து தப்பித்து டெல்லிக்கு சென்றனர். அவர்கள் மெஹ்ராலியில் உள்ள ஒரு குடியிருப்பில் வசிக்கத் தொடங்கினர்.
இதை தொடர்ந்து, ஷ்ரத்தா தனது குடும்பத்தினரின் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதை நிறுத்திவிட்டார். நவம்பர் 8 ஆம் தேதி, அவரது தந்தை விகாஸ் மதன் தனது மகளைப் பார்க்க டெல்லி சென்றார். அவர்கள் வசித்த ஃபிளாட்டை அடைந்தபோது, அது பூட்டப்பட்டிருந்தது. அவர் மெஹ்ராலி காவல்துறையை அணுகி தனது மகள் கடத்தப்பட்டதாக புகார் அளித்தார்.
அவரது புகாரின் பேரில், பூனவல்லாவை போலீஸார் கடந்த சனிக்கிழமை கைது செய்தனர். விசாரணையில், பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அவர் தவறான தகவல்களை அளித்து விசாரணை திசை திருப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், அவருக்கு உண்மையை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு, தெற்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில், அவருக்கு நார்கோ சோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவறான தகவல்களை அளித்து காவல்துறை விசாரணையை திசை திருப்புவதாக காவல்துறை தரப்பு அவர் மீது சந்தேகிக்கிறது. குறிப்பாக, ஷ்ரத்தாவின் செல்போனை பயன்படுத்தி அவர் என்ன செய்தார் என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. உடல் பாகங்களை வெட்டப்படுத்திய ரம்பம் குறித்தும் காவல்துறைக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
விசாரணையின் போது, பூனாவாலா வேறு வேறு பதில்களை அளித்துள்ளார். ஷ்ரத்தாவின் மொபைல் போனை மகாராஷ்டிராவில் வீசியதாகவும், மற்றொரு முறை டெல்லியில் போனை தூக்கி எறிந்ததாகவும் கூறியுள்ளார். நார்கோ சோதனையின் போது ஒரு மனநல மருத்துவரும் போலீஸ் குழுவுடன் செல்வார்கள் எனக் கூறப்படுகிறது.