Diwali : நம் முன்னோர்கள் பட்டாசு இல்லாத தீபாவளியை கொண்டாடினர் - டெல்லி அமைச்சர்
அரசியல் அல்ல, மக்களின் உயிரைக் காப்பதே டெல்லி அரசுக்கு முதன்மையானது என டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் இன்று தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தீபாவளி இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ள நிலையில், டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், அரசியல் அல்ல, மக்களின் உயிரைக் காப்பதே டெல்லி அரசுக்கு முதன்மையானது என டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் இன்று தெரிவித்துள்ளார்.
இன்று தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், டெல்லியில் காற்று தரக் குறியீடு (AQI) 250 ஆக பதிவாகியுள்ளது. அதாவது, மோசமான பிரிவில் டெல்லியின் காற்று தரம் பதிவாகியுள்ளது. தீபாவளி மாலையில் இது மேலும் ஆபத்தானதாக மாற வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இச்சூழலில், பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என கோபால் ராய் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் விரிவாக பேசியுள்ள அவர், "ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் மாசு அளவு அதிகரிக்கிறது. ஒவ்வொரு வருடமும் தீபாவளி கொண்டாடுகிறோம். இந்த தீபாவளிக்கு, மாசுபாட்டைக் கட்டுப்படுத்த உதவுமாறு அனைத்து டெல்லி மக்களிடமும் கேட்டுக்கொள்கிறோம்.
Our priority is to save lives. We're not interested in politics over firecrackers. Some people even moved Supreme Court over the issue. There is no scope of a debate after the top courts' decision in the matter: Delhi Environment Minister Gopal Rai
— Press Trust of India (@PTI_News) October 23, 2022
பட்டாசுகளை வெடிக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள். குறிப்பாக இளைஞர்கள் தங்கள் நகரத்தில் மாசுபடுவதை தடுக்க உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்" என்றார்.
பட்டாசுக்கு தடை விதித்ததற்கு எழுந்த விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ள கோபால் ராய், "அரசியலில் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. அரசியல் செய்ய விரும்புபவர்கள் செய்யலாம். மக்களின் உயிரைக் காப்பதே எங்கள் முதன்மையான கடமை. இந்த விவகாரம் தொடர்பாக சிலர் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றிருந்தனர்.
நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு, இந்த விவகாரத்தில் இப்போது விவாதத்திற்கு இடமில்லை. நம் முன்னோர்கள் தீபாவளி கொண்டாடும் போது பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படாததால் பட்டாசுகள் இல்லை. ஒவ்வொரு மதத்தின் முன்னுரிமையும் மக்களின் உயிரைக் காப்பதே. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே அரசின் நோக்கம்.
தீபாவளிக்கு பிறகு விவசாய கழிவு எரியும் சம்பவங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில், நாங்கள் வயல்களில் பயோ டிகம்போசர்களை தெளிக்கிறோம். ஆனால், டெல்லியைத் தவிர, பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தரபிரதேசத்திலும் விவசாய கழிவு எரிக்கப்படுகிறது. அதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார்.
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு பட்டாசு வெடிக்க தடை விதித்தது மட்டுமின்றி, பட்டாசு வெடித்தால் அபராதமும், சிறை தண்டனையும் வழங்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக பாஜக போராட்டம் நடத்தியுள்ளது.