வீட்டைவிட்டு விரட்ட முடியும்.. இதயங்களில் இருந்து விரட்ட முடியாது...ராகுல் காந்திக்காக டெல்லி வீட்டை கொடுத்த பெண் தலைவர்..!
மங்கோல்புரி பகுதியில் உள்ள வீட்டை ராகுல் காந்தியின் பெயருக்கு டெல்லி மகளிர் காங்கிரஸ் சேவாதல் தலைவர் ராஜ்குமாரி குப்தா மாற்றி உள்ளார்.
பிரதமர் மோடிக்கு எதிராகவும் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ராகுல் காந்தி, அதானி விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோல, லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து அவர் பேசியது சர்ச்சையை கிளப்பியது.
லண்டனில் ஜனநாயகம் குறித்து பேசிய ராகுல் காந்திக்கு எதிராக நாடாளுமன்ற கூட்டத்தை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் முடக்கினர். இப்படி, சர்ச்சை மேல் சர்ச்சை வெடிக்க கடந்த 2019ஆம் ஆண்டு, தேர்தல் பிரசாரத்தின்போது மோடி குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு வந்தது.
ராகுல் காந்திக்கு நோட்டீஸ்:
அதில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது சூரத் நீதிமன்றம். இதன் காரணமாக, மக்களவை உறுப்பினராக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட காரணத்தால் அரசு அளித்த பங்களாவில் இருந்து வெளியேற ராகுல் காந்திக்கு மக்களவை வீட்டு வசதிக்குழு நோட்டீஸ் அனுப்பியது.
ஏப்ரல் 23ஆம் தேதிக்குள் அரசு பங்களாவில் இருந்து ராகுல் காந்தி வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், ராகுல் காந்தி தொடர்ந்து டெல்லியில் தங்கும் வகையில், தன்னுடைய வீட்டை அவரின் பெயருக்கு மாற்றி உள்ளார் காங்கிரஸ் கட்சியின் பெண் தலைவர் ஒருவர்.
வீட்டை விட்டு விரட்ட முடியும்...இதயங்களில் இருந்து விரட்ட முடியாது:
மங்கோல்புரி பகுதியில் உள்ள வீட்டை ராகுல் காந்தியின் பெயருக்கு டெல்லி மகளிர் காங்கிரஸ் சேவாதல் தலைவர் ராஜ்குமாரி குப்தா மாற்றி உள்ளார். இந்திரா காந்தி பிரதமராக பதவி வகித்தபோது, ராஜ்குமாரி, இந்த வீட்டை பெற்றுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் சேவாதல் பிரிவின் ட்விட்டர் பக்கத்தில், "டெல்லி மகிளா காங்கிரஸ் சேவா தளத்தின் தலைவர் ராஜ்குமாரி குப்தா மங்கோல்புரி பகுதியில் உள்ள தனது வீட்டை ராகுல் காந்தியின் பெயருக்கு மாற்றியுள்ளார். இந்திரா காந்தியின் காலத்தில் இந்த வீடு அவருக்கு கடைத்துள்ளது. மோடியால் ராகுலை வீட்டை விட்டு விரட்ட முடியும். ஆனால், மக்களின் இதயங்களில் இருந்து விரட்ட முடியாது என்று ராஜ்குமாரி கூறியுள்ளார்" என குறிப்பிட்டுள்ளார்.
சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்காக ராகுல் காந்திக்கு 30 நாள்களுக்கு பிணை வழங்கப்பட்டது. கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ராகுல் காந்தி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம், தேசிய அளவில் புயலை கிளப்பியுள்ள நிலையில், கட்சி சார்பற்று ராகுல் காந்திக்கு அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.