(Source: ECI/ABP News/ABP Majha)
Dating App: டேட்டிங் ஆப் பயன்படுத்துவது கட்டாயம்.. மாணவிகளுக்கு உத்தரவிட்ட கல்லூரி..! குவியும் எதிர்ப்புகள்..!
டெல்லியில் கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்பதற்கு மாணவிகள் டேட்டிங் செயலியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என, பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு கடும் கண்டனங்கள் குவிந்துள்ளன.
டெல்லியில் கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்பதற்கு மாணவிகள் டேட்டிங் செயலியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என, பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு கடும் கண்டனங்கள் குவிந்துள்ளன. இதனிடையே, கடும் எதிர்ப்புகள் எழுந்ததை தொடர்ந்து, இந்த கட்டுப்பாடு திரும்பப் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டேட்டிங் செயலி பயன்பாடு கட்டாயம்:
ரெட்டிட் இணையதளத்தில் இதுதொடர்பாக பயனர் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், ”டெல்லியில் உள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் ஆண்டு விழாவில் பங்கேற்க வேண்டுமானால், பெண்கள் குறிப்பிட்ட டேட்டிங் செயலியில் தனக்கான கணக்கான கணக்கை தொடங்க வேண்டும். செல்போனின் குறிப்பிட்ட செயலி மற்றும் அதில் கணக்கு தொடங்கியதற்கான ஸ்க்ரீன் ஷாட் இல்லாவிட்டால், விழாவில் பங்கேற்க மாணவிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆண்களுக்கு இந்த கட்டுப்பாடுகளில் இருந்து விதி விலக்கு வழங்கப்பட்டது” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனிநபர் தகவல்:
குறிப்பிட்ட டேட்டிங் செயலியில் பதிவு செய்ய பயனாளரின் பெயர், பிறந்த தேதி, தொலைபேசி எண், சரிபார்க்க ஒரு செல்ஃபி மற்றும் உங்கள் முழு முகத்தையும் காட்டும் கட்டாய சுயவிவரப் படம் உட்பட தனிப்பட்ட தகவல்கள் தேவைப்படும் கடினமான செயலாகும் என அந்தச் சம்பவத்தைப் பற்றி எழுதியவர் குறிப்பிட்டுள்ளார்.
காரணம் என்ன?
குறிப்பிட்ட செயலியின் உரிமையாளர்கள் தான், அந்த கல்லூரி ஆண்டு விழாவிற்கான நிதியுதவியை வழங்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தான் அந்த செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் எனவும், அதிலும் ஆண்களை தவிர்த்து மாணவிகளுக்கு மட்டுமே கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. தங்களது செயலியை பிரபலப்படுத்தும் நோக்கில் அந்த தனியார் நிறுவனம், குறிப்பிட்ட கல்லூரியின் மாணவிகளின் விவரங்களை பயன்படுத்த முயல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்ததோடு, இதுவும் ஒருவித பாலியல் தொல்லை எனவும், அறிவற்ற செயல் எனவும் சமூக வலைதளங்களில் காட்டமாக விமர்சித்தனர்.
திரும்பப் பெறப்பட்ட கட்டுப்பாடு:
கடும் எதிர்ப்புகளை தொடர்ந்து பிரபல தனியார் பொறியல் கல்லூரி நிர்வாகம் ஆண்டு விழாவிற்கு விதித்த கட்டுப்பாட்டை திரும்பப் பெற்றதாகவும், விழாவில் பங்கேற்பதற்கு டேட்டிங் செயலியை பயன்படுத்துவது கட்டாயமில்லை எனவும் தெரிவித்துள்ளதாக, தனது திருத்தப்பட்ட பதிவில் ரெட்டிட் பயனாளர் குறிப்பிட்டுள்ளார்.