Delhi CM Kejriwal: ”அமலாக்கத்துறை விசாரணைக்கு நான் ரெடி; ஆனா ஒரு கண்டிஷன்” - அர்விந்த் கெஜ்ரிவால் அதிரடி
Delhi CM Kejriwal: மார்ச் 12ம் தேதிக்குப் பிறகு அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக தயார் என, டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
Delhi CM Kejriwal: அமலாக்கத்துறை விசாரணைக்கு காணொலி வாயிலாக ஆஜராக தயார் என, டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை விசாரணைக்கு தயார் - கெஜ்ரிவால்:
டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை இயக்குநரகம் அனுப்பிய சம்மனுக்கு பதிலளிக்க தயாராக இருப்பதாகவும், மார்ச் 12 ஆம் தேதிக்குப் பிறகு தேதி கேட்டுள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி விசாரணையில், கடந்த வாரம் அமலாக்கத்துறை அனுப்பிய எட்டாவது சம்மனுக்கு ஆம் ஆத்மி தரப்பில் தற்போது பதில் வந்துள்ளது.
”அமலாக்கத்துறைக்கு ஒரு கண்டிஷன்”
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அமலாக்க இயக்குனரகத்திற்கு பதில் அனுப்பியுள்ளார். சம்மன் சட்டவிரோதமானது என்றும் ஆனால் அதற்கு பதிலளிக்க தயாராக இருக்கிறார். மார்ச் 12ம் தேதிக்கு பிறகு விசாரணைக்கு ஆஜராக நேரம் ஒதுக்க வேண்டும் என கேட்டுள்ளார். காணொலி வாயிலாக மட்டுமே விசாரணைக்கு ஆஜராவேன் என அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளதாகவும்” குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை ஏழு சம்மன்களைத் தவிர்த்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைவரான கெஜ்ரிவால், இன்று நேரில் ஆஜராகும்படி பிப்ரவரி 27 ஆம் தேதி எட்டாவது முறையாக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருந்த நிலையில், இந்த விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, நீதிமன்றம் உத்தரவிட்டால் அமலாக்கத்துறை முன் ஆஜராவேன் என்று அவர் கூறியிருந்தார்.
Delhi CM Arvind Kejriwal has sent a reply to the Enforcement Directorate. He said the summons is illegal but still he is ready to answer. Arvind Kejriwal has asked for a date after March 12 from ED. After that, Arvind Kejriwal will attend the hearing via video conferencing: AAP… pic.twitter.com/GHEUSQglZx
— ANI (@ANI) March 4, 2024
நிதிமன்றத்தில் வழக்கு:
டெல்லி முதலமைச்சர் விசாரணைக்கான சம்மன்களை தொடர்ந்து புறக்கணித்து வந்ததால், அமலாக்கத்துறை தலைநகர் டெல்லியில் உள்ள நகர நீதிமன்றத்தை அணுகியது. இந்த விவகாரத்தில் விசாரணை நிறுவனமே நீதிமன்றத்தை நாடியதாகவும், அதன் உத்தரவுக்காக அவர்கள் காத்திருக்க வேண்டும் என்றும் கெஜ்ரிவால் கூறினார். மத்திய அரசும், அமலாக்கத்துறை அமைப்பும் நீதிமன்றத்தை நம்பவில்லையா எனவும் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தும், மத்திய அமலாக்கத்துறை தனக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பி வருவதாகவும் கெஜ்ரிவால் சாடுகிறார். இந்த சம்மன்கள் "சட்டவிரோதமானது" என்றும், எதிர்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு கருவி என்றும் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.