கெஜ்ரிவாலுக்கு மேலும் 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல்.. EDயை தொடர்ந்து சிபிஐ நெருக்கடி!
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் வழக்கில் கெஜ்ரிவாலுக்கு மேலும் 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
![கெஜ்ரிவாலுக்கு மேலும் 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல்.. EDயை தொடர்ந்து சிபிஐ நெருக்கடி! Delhi CM Arvind Kejriwal Sent To 14 Day Judicial Custody In Delhi Liquor Policy Case probe by CBI கெஜ்ரிவாலுக்கு மேலும் 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல்.. EDயை தொடர்ந்து சிபிஐ நெருக்கடி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/29/7015dab9ba08d498479ecfa153977a271719664117941729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் 21ஆம் தேதி அமலாக்க இயக்குநரகத்தால் (ED) டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து கடந்த மே மாதம், மக்களவை தேர்தலைக் கருத்தில் கொண்டு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின்
வழங்கியது.
EDயை தொடர்ந்து கெஜ்ரிவாலுக்கு சிபிஐ நெருக்கடி: இடைக்கால ஜாமின் நிறைவடைந்ததை தொடர்ந்து ஜூன் 2ஆம் தேதி, அரவிந்த் கெஜ்ரிவால் சரண் அடைந்தார். இதையடுத்து, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பிணை கேட்டு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்தார்.
இதற்கிடையே, ED விசாரித்து வந்த அதே மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக கெஜ்ரிவாலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவருக்கு டெல்லி நீதிமன்றம் மூன்று நாள்களுக்கு சிபிஐ காவல் விதித்தது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அவரை ஐந்து நாள்கள் காவலில் எடுக்க சிபிஐ முதலில் அனுமதி கோரியது.
ஆனால், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்ற சிறப்பு நீதிபதி அமிதாப் ராவத், கெஜ்ரிவாலை மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க மட்டுமே சிபிஐக்கு அனுமதி வழங்கியது. இந்த நிலையில், சிபிஐ விசாரித்து வரும் வழக்கில் கெஜ்ரிவாலுக்கு மேலும் 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ பரபர குற்றச்சாட்டு: விசாரணைக்காகவும் நீதியை நிலைநாட்டுவதற்கும் கெஜ்ரிவாலை காவலில் எடுப்பது அவசியமாகிறது என சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. இன்றைய நீதிமன்ற விசாரணையில், "விசாரணைக்கு கெஜ்ரிவால் ஒத்துழைப்பதில்லை. மழுப்பலான பதில்களையே அளிக்கிறார்" என சிபிஐ தரப்பு குற்றஞ்சாட்டியது.
"குற்றம் நடந்ததற்கான ஆதாரங்களை கெஜ்ரிவாலிடம் காட்டியபோது, 2021-22இன் புதிய கலால் கொள்கையின் கீழ் மொத்த விற்பனையாளர்களுக்கான லாப வரம்பை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்துவது குறித்து எந்த நியாயமான விளக்கத்தையும் அளிக்கவில்லை.
இரண்டாவது கொரோனா அலை உச்சத்தில் இருந்தபோது, தெற்கு குழுமத்தை சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் டெல்லியில் முகாமிட்டு கெஜ்ரிவாலுக்கு நெருக்கமான விஜய் நாயரை சந்தித்துள்ளனர். இதையடுத்து, ஒரே நாளில் கலால் கொள்கை அவசரமாக திருத்தப்பட்டது அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டது. ஏன் இப்படி செய்யப்பட்டது என்பதையும் அவரால் விளக்க முடியவில்லை" என சிபிஐ தரப்பு வாதிட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)