Opposition Parties Meeting: வெறுப்புவாதத்திலிருந்து இந்தியாவை மீட்கவே இந்த கூட்டம் - எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் அர்விந்த் கெஜிர்வால்..
வெறுப்புவாதத்திலிருந்து இந்தியாவை மீட்டு புதிய இந்தியாவை உருவாக்கவே இன்று அனைவரும் ஒன்று கூடியுள்ளோம் என டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜிர்வால் தெரிவித்துள்ளார்.
2014-ஆம் ஆண்டு, 2019-ஆம் ஆண்டு என நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக 9 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகிறது. பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றி பா.ஜ.க. அசுர பலத்தில் உள்ளது. இச்சூழலில், இன்னும் 9 மாதங்களில் அடுத்த மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் பா.ஜ.க தனது வெற்றியை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது. அதே சமயம் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க எதிர்கட்சிகள் ஒன்றாக இணைந்து களம் இறங்கியுள்ளனர்.
முதல் முறையாக கடந்த மாதம் 23 ஆம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக அது பெங்களூருக்கு மாற்றப்பட்டது. அதன் பேரில் நேற்றும் இன்றும் பெங்களூரில் இரண்டாவது கூட்டம் நடைபெற்றது. இரண்டு நாள் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு விஷயங்களை குறித்து விவாதிக்கப்பட்டது. முக்கியமாக இந்த எதிர்கட்சிகளின் கூட்டத்திற்கு ‘ INDIA’ - இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைந்த கூட்டணி என பெயர் சூட்டப்பட்டது. இக்கூட்டத்தில் அனைவரும் தங்கலது கருத்துக்களை முன்வைத்தனர். குறிப்பாக பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான இந்த கூட்டம் எதற்காக நடத்தப்படுகிறது? ஏன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
#WATCH | In the last 9 years, PM Modi could have done a lot of things but he destroyed all the sectors. We have gathered here not for ourselves but to save the country from hatred..., says AAP supremo and Delhi CM Arvind Kejriwal pic.twitter.com/gqqhuJnZBX
— ANI (@ANI) July 18, 2023
இந்த கூட்டத்தில் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதலமைச்சர் பேசுகையில், “ கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி பல விஷயங்களை செய்து அனைத்து துறைகளையும் அழித்து விட்டார். இங்கு ஒன்று கூடியிருப்பது நமக்காக அல்ல, வெறுப்புவாதத்தில் இருந்து இந்த தேசத்தை காக்க தான். புதிய இந்தியாவை உருவாக்கும் கனவு கொண்டு இங்கு ஒன்றிணைந்து உள்ளோம். புதிய இந்தியாவில் அனைத்து குழந்தைகளுக்கு கல்வி, அன்பும், அமைதியும் நிறைந்து இருக்கும். இன்று நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு விஷயங்களை குறித்து பேசினோம்” என தெரிவித்துள்ளார்.