ஜனநாயகத்தை அழிக்க முயற்சி..ஒன்றாக சேர்ந்து போராடுவோம்...எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கே முழக்கம்
ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்ற கூடியுள்ளோம் என எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள 26 கட்சிகள் கலந்து கொண்ட எதிர்க்கட்சிகளின் கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. வரவிருக்கும் மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த வகுக்க வேண்டிய வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இரண்டாவது நாளான இன்று கூட்டணிக்கு புதிய பெயர் வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
"ஒன்று சேர்ந்து போராடுவோம்"
கூட்டம் தற்போது நிறைவுபெற்றுள்ள நிலையில், தலைவர்கள் அனைவரும் இணைந்து செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜனநாயகத்தை அழிக்க பாஜக முயற்சி செய்து வருவதாகவும் அதை எதிர்க்க ஒன்று சேர்ந்து போராடுவோம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "எங்கள் கூட்டணி இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி என்று அழைக்கப்படும். அடுத்த எதிர்க்கட்சி கூட்டம் மும்பையில் நடைபெறும். தேதி விரைவில் அறிவிக்கப்படும். 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும். குழு உறுப்பினர்களின் பெயர்கள் மும்பையில் அறிவிக்கப்படும்.
நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுவதற்கான மிக முக்கியமான சந்திப்பு இது. நாங்கள் ஒன்று கூடி பல்வேறு விஷயங்களை விவாதித்தோம். இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தலைவர்கள் ஆதரித்துள்ளனர்.
எதிர்க்கட்சிகளுக்கு டெல்லியில் செயலகம்:
எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை நிர்வாகத்திற்காக டெல்லியில் ஒரு செயலகம் அமைக்கப்படும். பிரச்னைகள் குறித்து பல்வேறு குழுக்கள் அமைக்கப்படும். கூட்டறிக்கைக்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கிடையில் சில வேறுபாடுகள் உள்ளன. ஆனால் நாங்கள் அதை பின்னுக்கு தள்ளி நாட்டின் நலனுக்காக நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். 2024 மக்களவைத் தேர்தலில் ஒற்றுமையாகப் போராடி வெற்றி பெறுவோம்" என்றார்.
பாஜக கூட்டணியை விமர்சித்து பேசிய அவர், "தேசிய ஜனநாயக கூட்டணி 30 கட்சிகளுடன் கூட்டம் நடத்துகிறது. இந்தியாவில் இத்தனை கட்சிகள் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை. இதற்கான கூட்டங்கள் எதுவும் நடத்தவில்லை. ஆனால், இப்போது ஒவ்வொரு கட்சியாக (NDA கட்சிகளுடன்) சந்தித்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. எதிர்க்கட்சிகளை கண்டு பயப்படுகிறார். ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்றவே நாங்கள் இங்கு கூடியுள்ளோம்" என்றார்.
கூட்டணிக்கு பதில் முன்னணி என்ற வார்த்தையை பெயரில் சேர்க்க இடதுசாரி கட்சிகள் விரும்பியதாகவும், அதேபோல கூட்டணியின் பெயரில் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற வார்த்தை இடம்பெறுவதை தவிர்க்க சில கட்சிகள் கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது. பாஜக தலைமையிலான கூட்டணிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி என பெயர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.