![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
டெல்லியில் காற்று மாசு: ஆயுளில் 10 ஆண்டுகள் குறையும்.. ஆய்வில் வெளியிடப்பட்ட அதிர்ச்சித் தகவல்!
உலகிலேயே காற்று மாசு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட நகரங்களின் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது டெல்லி. மேலும், இதனால் அங்கு வாழ்பவர்களின் ஆயுளில் சுமார் 10 ஆண்டுகள் குறைவதாக கூறப்பட்டுள்ளது.
![டெல்லியில் காற்று மாசு: ஆயுளில் 10 ஆண்டுகள் குறையும்.. ஆய்வில் வெளியிடப்பட்ட அதிர்ச்சித் தகவல்! Delhi Air pollution may reduce average life span by 10 years says University of Chicago AQLI report டெல்லியில் காற்று மாசு: ஆயுளில் 10 ஆண்டுகள் குறையும்.. ஆய்வில் வெளியிடப்பட்ட அதிர்ச்சித் தகவல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/14/c73f0c3f76293e299dee88b4f67c2aba_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உலகிலேயே காற்று மாசு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட நகரங்களின் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது டெல்லி. மேலும், இதனால் அங்கு வாழ்பவர்களின் ஆயுளில் சுமார் 10 ஆண்டுகள் குறைவதாக சிகாகோ பல்கலைக்கழகத்தின் எனர்ஜி பாலிசி இன்ஸ்டிட்யூட் சார்பாக வெளியிடப்பட்டுள்ள Air Quality Life Index அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை சூழல் மாசு குறித்ததாகவும் மனித ஆயுள் எதிர்பார்ப்பில் காற்று மாசு ஏற்படுவதன் தாக்கமும் இதில் விளக்கப்பட்டுள்ளன.
உலகிலேயே அதிக மாசடைந்த இடமாக இந்தியாவின் கங்கை சமவெளி கண்டறியப்பட்டுள்ளது. பஞ்சாப் முதல் மேற்கு வங்கம் வரையிலான பகுதியில் வாழும் சுமார் 50 கோடி மக்கள் இதே மாசுபட்ட சூழலில் வாழ்ந்தால் சராசரியாக தங்கள் ஆயுளில் இருந்து சுமார் 7.6 ஆண்டுளை இழக்க நேரிடும் எனவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புகைபிடிக்கும் பழக்கம் மூலமாக 1.5 ஆண்டுகள் ஆயுள் குறையும் எனவும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக சுமார் 1.8 ஆண்டுகள் ஆயுள் குறையும் எனவும் கூறப்பட்டிருந்த நிலையில், இவற்றை விட ஆபத்தான ஒன்றாக மாறியிருக்கிறது காற்றுமாசு.
உலகிலேயே அதிக மாசடைந்த நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது இந்தியா. முதலிடத்தை வங்காளதேசம் பிடித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள பாதுகாப்பான காற்றின் மாசு அளவை விட சுமார் 10 மடங்கு அதிகமாக மாசடைந்துள்ளது டெல்லி நகரம். இதன் PM 2.5 அளவு சுமார் 107.6 என அளவிடப்பட்டுள்ளது. PM 2.5 என்பது நுரையீரலிலும், பிற உறுப்புகளிலும் காற்று மூலமாக நுழையும் சிறிய துகள்கள் ஆகும். இவை நச்சுத்தன்மை கொண்டவை.
இந்தக் காற்று மாசு குறித்து பேசியுள்ள இந்த அறிக்கையில், கருவில் இருந்தே பிரச்னைகளை எதிர்கொள்ளும் மிகப்பெரிய உலக சுகாதாரப் பிரச்சினையாக காற்று மாசு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கின் போது, சராசரியாக உலகம் முழுவதும் காற்று மாசு காரணமாக மக்கள் தங்கள் ஆயுளில் சுமார் 2.2 ஆண்டுகளை இழந்து வரும் நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியாவில் காற்று மாசு குறையாமல், சராசரி வட இந்தியரின் ஆயுளில் சுமார் 5 ஆண்டுகளைக் குறைத்துள்ளது. இதே அளவு காற்று மாசு பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளிலும் இருப்பதால் இதனை தென்னாசியாவின் பிரச்னையாகக் கருத வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில், இந்தப் பகுதிகளில் வாகனங்கள் பல மடங்கு அதிகரிப்பு, மூன்று முதல் நான்கு மடங்கு வரை அதிகரித்த நிலக்கரி அனல் மின் நிலையங்கள் முதலானவை காற்று மாசின் அடிப்படைக் காரணங்களாகக் கருதப்படுகின்றன. பயிர்களை எரிப்பது, செங்கல் சூளைகள், தொழிற்சாலையில் வெளியேறும் புகை ஆகியவையும் இதன் காரணங்களாகக் கருதப்படுகின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)