Justice for Sabiya : 21 பெண் காவலர் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூர கொலை : அதிரவைக்கும் கொடூர தகவல்கள்..
இந்த, கொடூர கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை, காவல்துறை ஒரு வாரத்துக்கும் மேலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
டெல்லியில், நான்கு மாதங்களுக்கு முன்பு சிவில் பாதுகாப்பு அதிகாரியாக பணியில் சேர்ந்த பெண் ஒருவர் குழு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியடுள்ளது. இந்த, கொடூர கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை காவல்துறை ஒரு வாரத்துக்கும் மேலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்ல என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த வாரம் நான்கு நபர்களால் கூட்டு வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் அப்பெண்ணின் உடலில் 50 இடங்களுக்கும் மேற்பட்ட வெட்டுக் காயங்கள் உள்ளன. மார்பகங்கள் அறுக்கப்பட்டும், பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
Prayers with Rabiya’s family. Criminals must get strictest punishment. Her family also deserves to know how/why she was killed. MIM Delhi Pres @KaleemulHafeez has been with her family since day 1. Rabiya worked for Delhi govt, she deserves better than tokenism #JusticeForRabiya
— Asaduddin Owaisi (@asadowaisi) September 4, 2021
இந்த படுகொலை தொடர்பாக முகமது நிஜாமுதீன் என்று அடையாளம் காணப்பட்ட ஒருவர் சரணடைந்திருப்பதாக பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா (Press Trust of India) முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது. காவல்துறை அதிகாரிகளின் பதிவை மேற்கோள் காட்டிய அந்த செய்தியில், கொலை செய்தவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் என்றும் கொலையை தாமாக ஒப்புக்கொண்டார் எனவும் தெரிவித்தது.
மேலும், பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்திடம் பேசிய தென்கிழக்கு டெல்லி காவல் கண்காணிப்பாளர் ஆர். பி. மீனா, "திருமணத்துக்கு வெளியிலான உறவு காரணமாக எழுந்த சர்ச்சையால் கொலை செய்ததாக குற்றவாளி வாக்குமூலம் அளித்துள்ளார். ஃபரிதாபாத்தில் உள்ள சூரஜ்குண்ட் ஏரி அருகே சம்பவம் நடைபெற்றுள்ளது. எப்ஐஆர் பதிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
ஆனால், இதனை பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் ஏற்க மறுக்கின்றனர். திருமணம் செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஒரு வாரகாலமாகியும் அதற்கான எந்த ஆதாரத்தையும் காவல்துறை வழங்கவில்லை. ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் குற்றவாளியை காவலில் வைத்திருந்தும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
'Muslim Mirror' என்ற ஊடக நிறுவனத்திடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை," கொலையை மறைக்க சதிச்செயல் நடைபெற்று வருகிறது. என் மகள் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது. டிஎம் அலுவலகத்திற்குள் நடக்கும் ஊழல் மற்றும் பிற முறைகேடுகள் குறித்து அவர் அறிந்திருந்தார். அதை மறைக்கவே கொலை நடந்திருக்கிறது. உடன் வேலை பார்க்கும் இரண்டு பேர் தான் கொலையை செய்துள்ளனர்" என்று குற்றம் சாட்டினார்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தனது கண்டன அறிவிப்பில், "ஒரு நாட்டின் தலைநகரில் பெண்களின் பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக் குறியாக இருப்பது நம்மையெல்லாம் தலைகுனிய வைக்கிறது. இந்தக் கொடூரச் சம்பவம் நடைபெற்று ஒரு வாரகாலமாகியும் இதுவரை யாரும் கைது செய்யப்படாதது வெட்கத்திற்குரியது.
டெல்லியின் காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒன்றிய அரசு மெத்தனப்போக்குடன் செயல்படுவதே இதற்குக் காரணம். சபியாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். இதுபோன்று மற்றொரு பெண் பாதிக்கப்படக்கூடாது என்றால் குற்றவாளிகளை விரைவில் கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.