பீகாரில் மட்டும் ரூ.200 கோடிக்கு சேதம்.. அக்னிபத் வன்முறையால் கரியாய்போன மக்கள் காசு!
அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் காரணமாக 234 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு 340 ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தெலங்கானா செகந்திராபாத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். ரயில்கள் எரிக்கப்பட்டன. பொது மற்றும் தனியார் வாகனங்கள் தாக்கப்பட்டன. ரயில் நிலையங்கள் போர்களமாக மாறியுள்ளன.
இந்திய ராணுவத்திற்கான செலவுகளை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு அக்னிபத் திட்டத்தை அறிவித்தது. இதற்காக மத்திய அமைச்சரவை, ஜூன் 14 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. அக்னிபத் திட்டத்தின்கீழ் சேரும் வீரர்கள், மொத்தம் 4 ஆண்டுகள் இந்திய ராணுவத்தின் முப்படை எனப்படும் தரைப் படை, கப்பல் படை, விமானப் படைகளில் பணியாற்றுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Agnipath Protests Live Updates: 260 Arrested In UP, Buses Targeted In Bihar https://t.co/HqHUnyKZY4 pic.twitter.com/bzTeu3By9C
— NDTV (@ndtv) June 18, 2022
இந்தியா முழுவதும் அனைத்து வகுப்புகளிலும் இருந்து 46 ஆயிரம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 90 நாட்களுக்குள் அக்னி வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். 17.5 வயது முதல் 23 வயது வரையிலான ஆண்களும் பெண்களும் அக்னி பாதை திட்டத்தில் சேரலாம். ஏற்கெனவே உள்ள கல்வித் தகுதி, உடல் தகுதி நடைமுறைகள் பின்பற்றப்படும்.
அக்னிபத் திட்டத்தில் இணைபவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பின்னர் 4 ஆண்டுகளுக்கு அக்னி வீரர்கள் பணியாற்றுவர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை ஊதியம் அளிக்கப்படும். அதுமட்டுமின்றி, மருத்துவ மற்றும் காப்பீட்டு பலன்கள் வழங்கப்படும். 4 ஆண்டுகால சேவைக்குப் பிறகு, பணிக்கால செயல்திறன் அடிப்படையில், அதிகபட்சமாக 25% பேர் இந்திய ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர். 4 ஆண்டு காலப் பணிக்குப் பிறகு வெளியேறும் வீரர்களுக்கு, சேவை நிதியும் திறன் சான்றிதழும் வழங்கப்படும்.
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என இளைஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, பல்வேறு மாநிலங்களில் இவர்கள் நடத்தும் போராட்டம் நாட்டையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் காரணமாக 234 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு 340 ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிகார் ரயில் நிலையங்களில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் காரணமாக 200 கோடி ரூபாய் மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளதாக மண்டல ரயில்வே மேலாளர் பிரபாத் குமார் தெரிவித்துள்ளார். 50 ரயில் பெட்டிகள், 5 ரயில்வே இன்ஜின்கள் முற்றிலுமாக எரிக்கப்பட்டதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார். நடைமேடைகள், கணினிகள், பல்வேறு தொழில்நுட்ப பொருள்கள் ஆகியவையும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இதையடுத்து, முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோனையில் ஈடுபட்டு வருகிறார்.