புதுச்சேரி : “சுற்றுலா என்ற பெயரில் கலாச்சார சீரழிவு மெல்ல மெல்ல பரவி வருகிறது” - அன்பழகன், அதிமுக
ஆன்மிக பூமியான புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுலா என்ற பெயரில் கலாசார சீரழிவு மெல்ல மெல்ல பரவி வருகிறது, கிழக்கு மாநில அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பழகன் குற்றச்சாட்டு
![புதுச்சேரி : “சுற்றுலா என்ற பெயரில் கலாச்சார சீரழிவு மெல்ல மெல்ல பரவி வருகிறது” - அன்பழகன், அதிமுக Cultural degradation in the name of tourism is slowly spreading in the spiritual land of Pondicherry; ADMK East State Anbalagan charge புதுச்சேரி : “சுற்றுலா என்ற பெயரில் கலாச்சார சீரழிவு மெல்ல மெல்ல பரவி வருகிறது” - அன்பழகன், அதிமுக](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/02/c14d25726c7d81fc0b39704b597422fd_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஆன்மிக பூமியான புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுலா என்ற பெயரில் கலாசார சீரழிவு மெல்ல மெல்ல பரவி வருகிறது. வாரத்தின் இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வெளிமாநிலத்திலிருந்து சுற்றுலா என்ற பெயரில் புதுச்சேரிக்கு வருகின்றவர்களை மையப்படுத்தி பல விரும்பத்தகாத வியாபாரங்கள் நடக்கின்றன.
புதுச்சேரி மாநிலத்தில் 300-க்கும் மேற்பட்ட மசாஜ் கிளப்கள், ஸ்பா, ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் நகராட்சிகளிடம் ஆண்டுக்கு ரூ.3,000, மற்றும் ரூ.5,000 என வரி செலுத்தி வணிக அனுமதி பெற்று நடத்தி வருகின்றனர். அதில், பெரும்பாலான இடங்களில் இளம் பெண்களை வைத்து விபச்சாரமும், ஆன்லைன் மூலம் வெளி மாநிலத்தில் இருப்பவர்களை இங்கே அழைத்து வந்து, மசாஜ் என்ற பெயரில் தவறான செயல்கள் புரிவதும் நடைபெற்று வருகின்றன.
விபச்சார தொழிலில் ஈடுபடுபவர்களை காவல்துறை கைது செய்வது அன்றாட நிகழ்வாக இருக்கிறது. அதே போன்று நகரப்பகுதிகளில் பல ஹோட்டல்களில் டி.ஜே என்ற பெயரிலும், கிளாசிக்கல் டான்ஸ் என்று அனுமதி பெற்று அருவருக்கத்தக்க வகையில் பெண்களை வைத்து நடன நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பல மதுபானக் கடைகளில் அரைகுறை ஆடைகளுடன் வெளிமாநில இளம்பெண்கள் நேரடியாக மதுபானங்களை வாங்குவதும், அவற்றை சாலையிலேயே அமர்ந்து குடிப்பதும் சர்வ சாதாரணமாக இருக்கிறது. புதுச்சேரி என்றாலே அண்டை மாநிலத்தவர்கள் மத்தியில் ஒரு தவறான கண்ணோட்டம் ஏற்படும் விதத்தில் நம் மாநிலத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதுபோன்ற அனுமதிகள் வழங்கும் போது உள்ளுர் காவல்துறையின் தடையில்லா சான்றிதழ் பெறுவது இல்லை. பல இடங்களில் இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுகிறது. எனவே, அரசு இதிலிருக்கும் உண்மை நிலையை கருத்தில் கொண்டு நம் மாநிலத்துக்கு களங்கம் ஏற்படாதவாறும், நம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் சீர்கெடாமல் இருக்கவும் புதுச்சேரியில் கலாச்சார சீரழிவை தடுக்கவும், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
புதுச்சேரி நகரப்பகுதியில் மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் 350-க்கும் மேற்பட்ட வீடுகள் தங்கும் விடுதியாக மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. அதுபோன்ற வீடுகளில் தங்க வருபவர்களுக்கு பார்க்கிங் வசதி கூட இல்லாத இடங்களில் அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றன. அங்கு யார் வருகிறார்கள்? யார் தங்குகிறார்கள்? என்ற விவரங்களை உள்ளுர் காவல் நிலையங்களில் தெரியப்படுத்துவதும் இல்லை.
இதுபோன்ற இடங்களில் சமூக விரோதிகள் தங்கு தங்குதடையின்றி தங்கும் நிலை உள்ளது. குடியிருப்புப் பகுதிகளில் வீடுகள் இவ்வாறு தங்கும் விடுதியாக மாற்றம் செய்யும் போது, காவல் துறை, தீயணைப்புத் துறை, போக்குவரத்துத் துறை, சுற்றுச்சூழல் துறை போன்ற எந்த துறையிலும் அனுமதி பெறப்படுவதில்லை. ஒரு தெருவில் நான்கு வீடுகள் இவ்வாறு தங்கும் விடுதிகளாக மாற்றம் செய்யும்போது மற்றவர்கள் அங்கு நிம்மதியாக வசிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதிலும் அரசு சரியான முடிவினை எடுக்கவேண்டும்.
எனவே, முதலமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகியோர் இது தொடர்பாக காவல்துறையின் உயரதிகாரிகளிடம் விசாரித்து ஒட்டுமொத்தமாக புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் மசாஜ் கிளப்கள், ஸ்பா ஆகியவற்றிற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யவேண்டும். அதேபோல மதுபான கடைகளில் இளம் பெண்களுக்கு மது விற்பனை செய்வதற்கும், பொது இடங்களிலும், வழிபாட்டு தலங்களிலும் ஆபாசமான அருவருக்கத்தக்க வகையில் உடையணிந்து வருவதற்கும் தடை விதிக்க வேண்டும். இந்த சூழல் மேலும் நீடித்தால், எதிர்காலத்தில் புதுச்சேரி மாநிலம் என்பது இந்திய அளவில் மற்றவர்களால் களங்கப்படுத்தப்படும் என்றார்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)