Aryan Khan | சல்மான்கான் வழக்குக்கு ஆஜர்.. இப்போது ஷாருக்கான் மகனுக்கும்.. யார் இந்த வழக்கறிஞர்?
சல்மான் தீர்ப்பு வழங்கப்பட்ட 3 மணிநேரத்திற்குள் மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகி இடைக்கால ஜாமீன் பெற்றார்.
மும்பை சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் ஆர்யன் கான் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது மகனுக்காக வாதாடுவதற்காக புதிய வழக்கறிஞரை நியமித்துள்ளார் நடிகர் ஷாருக் கான். அந்த வழக்கறிஞர் ஏற்கெனவே தனது பேச்சுத்திறமையின் காரணமாக நடிகர் சல்மான் கானுக்கு ஜாமீன் பெற்றுத் தந்தவர். இந்நிலையில் அவரது நியமனம் பேசுபொருளாகியுள்ளது.
2002ஆம் ஆண்டின் போது மும்பையில் பாந்த்ராவில் நடைபாதையில் படுத்திருந்தவர்கள் மீது காரை ஏற்றிக் கொன்ற வழக்கில், நடிகர் சல்மான் கான் குற்றவாளி என கடந்த 2015ம் ஆண்டு மும்பை அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. தொடர்ந்து அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்திருந்தது. இதையடுத்து சல்மான் தீர்ப்பு வழங்கப்பட்ட 3 மணிநேரத்திற்குள் மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகி இடைக்கால ஜாமீன் பெற்றார்.
அப்போது மும்பை உயர்நீதிமன்றத்தில் சல்மான் கானுக்காக ஆஜராகிய வழக்கறிஞர்தான் அமித் தேசாய். அப்போது அவரது வாதாடும் திறமை பரவலாக விவாதிக்கப்பட்டது. அவர் வாதாடிய போது, விபத்து ஏற்படுத்திய வாகனத்தை சல்மான் கான் ஓட்டினார் என்பது உறுதி செய்யப்படவில்லை என்றார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பெறப்பட்டுள்ள சாட்சியத்தில், வாகனம் ஒரு மணி நேரத்திற்கு 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் செலுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த சம்பவம் தொடர்பான பதிவில், 14 கிலோமீட்டர் தூர தொலைவை அரை மணி நேரத்தில் அந்த வாகனம் சென்றடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற முறையற்ற பதிவுகள் உள்ளது என வழக்கறிஞர் அமித் தேசாய் சுட்டிக்காட்டினார். மேலும் மும்பை அமர்வு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்யக்கோரியும் வாதாடினார். அப்போது சல்மான் கானுக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கானின் ஜாமீன் மனு ஏற்கெனவே கீழமை நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது இந்த வழக்கு தற்போது சரியான சென்று கொண்டிருப்பதால் கூடுதல் ஆவணங்கள் இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட இருப்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை மும்பை சிறப்பு நீதிமன்றம் வரும் புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது. நாளை ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது. இந்த சூழலில்தான் தனது மகனுக்காக வாதாடுவதற்காக புதிய வழக்கறிஞராக அமித் தேசாயை நியமித்துள்ளார் நடிகர் ஷாருக் கான். அவருக்கு பல லட்சங்களில் சம்பளம் கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: | ரூபாய் தாள்களை மடித்து கட்டிய மாலை.. மொத்த மதிப்பு ரூ.5 கோடி... வாய்பிளக்க வைக்கும் கோவில் அலங்காரம்