Covid-19 Third Wave : இந்தியாவில் 3வது அலை தவிர்க்க முடியாதது; முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் விஜய் ராகவன்
முந்தைய நோய்த்தொற்றுகளும், தடுப்பூசிகளும் ஏற்படுத்திய அழுத்தம் காரணமாக சார்ஸ்-கோவி-2 கொரோனா வைரஸ் அதிக மாறுபாடுகள் கொண்டதாக உருவாகும். அதை மனதில் வைத்துக் கொண்டு அறிவியல் பூர்வமாக தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Covid-19 Third Wave is Inevitable: சார்ஸ்-கோவி-2 கொரோனா வைரஸின் பரவலை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றின் மூன்றாவது அலை தவிர்க்க முடியாததாக உள்ளது என இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் விஜய் ராகவன் தெரிவித்தார். இருப்பினும், மூன்றவாது அலையின் கால அளவை கணிக்க இயலாது என்றும் கூறினார்.
கொரோன வைரஸ் தொடர்பான கேள்விகளுக்கு செய்தியாளர்களிடம் பதிலளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முந்தைய நோய்த்தொற்றுகளும், தடுப்பூசிகளும் ஏற்படுத்திய அழுத்தம் காரணமாக சார்ஸ்-கோவி-2 கொரோனா வைரஸ் அதிக மாறுபாடுகள் கொண்டதாக உருவாகும். அதை மனதில் வைத்துக் கொண்டு அறிவியல் பூர்வமாக தயாராக இருக்க வேண்டும் என்று குறிபிட்டார்.
வைரஸின் இந்த மரபியல் மாறுபாடுகள் இயற்கையானது. இது அனைத்து நாடுகளிலும் காணப்படுகிறது. மேலும், மாறுபாடுகளுடன் கூடிய கொரோனா வைரஸ் முந்தைய கொரோனா வைரஸ் போல்தான் பெரும்பாலும் கடத்தப்படும். இந்த மாறுபாடுகளுடன் கூடிய வைரஸ், பாதிப்பை அதிகரிக்கச் செய்யும் விதமாகத் தான் செயல்படும் என்று தெரிவித்தார்.
முன்னதாக, இந்தியாவில் மாறுபாடுகளுடன் கூடிய கொரோனா வைரசை, மரபியலுக்கான இந்திய கொரோனா கூட்டமைப்பு (INSACOG) பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
மரபியலுக்கான இந்திய கொரோனா கூட்டமைப்பின் கீழ் (INSACOG) 10 தேசிய பரிசோதனைக் கூடங்கள் அடங்கிய குழுவை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்தாண்டு டிசம்பர் 25ம் தேதி அமைத்தது. அப்போது முதல், நாட்டின் பல பகுதிகளில் இருந்து அனுப்பப்படும் கொவிட்-19 வைரஸ் மாதிரிகளில் வேறுபாடுகள் உள்ளதா என ‘இன்சாகாக்’ ஆய்வு செய்து வருகிறது.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அனுப்பிய 10,784 கொவிட் வைரஸ் மாதிரிகளில், 771 மாதிரிகள் மரபியல் வேறுபாடுகளுடன் இருந்தது கண்டறியப்பட்டது.
இவற்றில் 736 மாதிரிகள் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ். 34 மாதிரிகள் தென் ஆப்பிரிக்காவில் கண்டறிப்பட்ட வைரஸ் வகையைச் சேர்ந்தது. ஒரே ஒரு மாதிரி, பிரேசிலில் கண்டறிப்பட்ட கொரோனா வைரஸ் மாதிரி. இந்த மாறுபட்ட வைரஸ் மாதிரிகள், 18 மாநிலங்களில் கண்டறியப்பட்டன.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிடம் எடுக்கப்படும் மாதிரிகளும், இன்சாகாக் கூட்டமைப்பில் உள்ள 10 பரிசோதனைக் கூடங்களில் மரபியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
மகாராஷ்ராவில் இருந்து அனுப்பப்பட்ட மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, அவை 2020 டிசம்பர் மாதம் சேகரிக்கப்பட்ட மாதிரிகளுடன் ஒப்பிடப்பட்டன.
இதில் மாறுபாடுகள் அதிகரித்து இருந்தது தெரியவந்தது. இந்த மாறுபாடுகளுடன் கூடிய வைரஸ், பாதிப்பை அதிகரிக்கச் செய்தன. 15 முதல் 20 சதவீத மாதிரிகளில் இந்த மாறுபாடுகள் இருந்தன. இவை பழைய மாதிரிகளுடன் ஒத்துப் போகவில்லை. கொரோனா பாதிப்பு ஏற்பட்டவருடன், நெருங்கி பழகியவர்களுக்கும், தேசிய கொரோனா சிகிச்சை நெறிமுறைப்படி பரிசோதனை அதிகரிக்கப்பட்டு, பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் சிகிச்சை அளிக்கப்படுகின்றன.
கேரளாவின் 14 மாவட்டங்களில் இருந்து வந்த 2032 கொரோனா வைரஸ் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், 11 மாவட்டங்களைச் சேர்ந்த 123 மாதிரிகள் N440K வகையைச் சேர்ந்தவை. இதே வகை வைரஸ், ஆந்திராவில் இருந்து சேகரிக்கப்பட்ட 33 சதவீத மாதிரிகளிலும், தெலங்கானாவில் இருந்து சேகரிக்கப்பட்ட 53 மாதிரிகளிலும் முன்பு கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.