ஆற்றில் குழந்தைகளை பறிகொடுத்தவர்களை ஞாபகம் இருக்கிறதா? விபத்து நடந்த அதே நாளில் நிகழ்ந்த அற்புதம்..
ஆந்திராவில் கடந்த 2019-ஆம் ஆண்டில் கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட படகு விபத்தில் 2 குழந்தைகளை இழந்த தம்பதிக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அதே நாளில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.
வாழ்க்கை அழகானதுதான். அது அவ்வப்போது நிரூபணமாகிவிடும். ஆந்திராவில் கடந்த 2019ல் கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட படகு விபத்தில் 2 குழந்தைகளை இழந்த தம்பதிக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அதே நாளில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.
கடந்த 2019 செப்டம்பர் 15-ஆம் தேதி ஆந்திரப் பிரதேச மாநிலம் கோதாவரி ஆற்றில் ஒரு படகு விபத்து நடந்தது. அதில் தம்பதியின் இரு குழந்தைகளும், அப்பல ராஜூவின் தாயாரும் பயணித்தனர். படகு விபத்தில் டி.அப்பல ராஜூ, அவரது மனைவி பாக்யலட்சுமியின் இரண்டு பெண் குழந்தைகளும் இறந்துவிட்டனர். அப்பல ராஜூவின் தாயாரும் இதில் இறந்தார். ராஜய வசிஷ்டா என்ற அந்தப் படகில் 77 பயணிகள் இருந்தனர். பாப்பிக்கொண்டலு பகுதியில் விபத்து நிகழ்ந்தது. அருகிலிருந்த கிரமா மக்கள் 26 சுற்றுலா பயணிகளைக் காப்பாற்றினர். ஆனால் 50 பேர் உயிரிழந்தனர். பாக்யலட்சுமி, அப்பல ராஜூவின் குழந்தைகளுக்கு வயது முறையே 1 மட்டும் 3.
இந்த விபத்தில் இரண்டு குழந்தைகளும், இறந்துவிட பாக்யலட்சுமியும் அப்பல ராஜூவும் நொறுங்கிப் போயினர். இருவரும் கண்ணாடி தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் ஐவிஎஃப் முறையில் பாக்யலட்சுமி கருத்தரித்தார். தம்பதிக்கு 2021 செப்டம்பர் 15 ஆம் தேதி இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஒரு குழந்தை 1.9 கிலோ எடையிலும் இன்னொரு குழந்தை 1.6 கிலோ எடையிலும் இருந்தன.
இது குறித்து பாக்யலட்சுமி நாங்கள் இரட்டைக் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கவில்லை. கடவுள் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளார் என்றார். பாக்யலட்சுமி, அப்பல ராஜூக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சுதா பத்மஸ்ரீ, இந்தத் தம்பதிக்கு குழந்தைப் பேறு சிகிச்சையளிப்பதை நாங்கள் முதன்மை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சவாலாக எடுத்துக் கொண்டோம் என்று கூறினார்.
விபத்தில் மூழ்கியப் படகை கோதாவரி ஆற்றிலிருந்து வெளிக்கொண்டு வர ஒரு மாதத்துக்கும் மேலானது. ஸ்கூபா டைவர்கள், படகுகள், பாய்மரப் படகுகள், நீச்சல் வீரர்கள், இரும்புக் கம்பிகள் எனப் பெரும் பலத்துடன் படகு வெளியே கொண்டு வரப்பட்டது.
ஒரேநேரத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரைப் பறித்த விபத்தை யாராலும் மறக்கமுடியாது. அதுவும் இரண்டு குழந்தைகளைப் பறிகொடுத்த பாக்யலட்சுமி, அப்பலராஜூ தம்பதிக்கு அது மிகுந்த வேதனை கொடுத்திருக்கும்.
அந்த நாளைப் பற்றி பதற்றத்துடனேயே பேசுகிறார் பாக்யலட்சுமி. நானும், என் கணவரும் கூட அன்று படகுச் சுற்றுலா செல்வதாக இருந்தது. ஆனால், விடுமுறை கிடைக்காததால் நாங்கள் செல்லவில்லை. எனது மாமியார் எங்கள் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு சென்றார். கடந்த ஒராண்டாக நாங்களும் அந்தப் படகில் சென்றிருக்கலாமே என்று அழுது புலம்பியிருக்கிறோம். ஆனால் எங்கள் வேதனையைப் போக்க இன்று இரட்டைக் குழந்தைகள் இரட்டிப்பு மகிழ்ச்சியாக வந்துள்ளனர் என்றார்.