இப்படியும் திருட்டு! சிக்னல் பேட்டரியை குறிவைத்து தூக்கிய ஜோடி.. பொறி வைத்து தூக்கிய போலீஸ்!
கடந்த ஜூன் 2021 மற்றும் ஜனவரி 2022 மாதங்களில் பெங்களூரு நகரம் முழுவதும் உள்ள 68 போக்குவரத்து சந்திப்புகளில் இருந்து 230 க்கும் மேற்பட்ட பேட்டரிகளை திருடியுள்ளதை போலீசார் கண்டறிந்தனர்.
பெங்களுருவில் சுமார் 200க்கும் மேற்பட்ட போக்குவரத்து சிக்னல் பேட்டரிகளை நூதன முறையில் திருடிய தம்பதியினரை போலீசார் கைது செய்தனர்.
இன்றைக்கு வளர்ந்துவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு, நூதன முறையிலான திருட்டுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏடிஎம்களை சரிசெய்கிறோம் என்ற பெயரில் அங்குள்ள பேட்டரிகளை திருடிய சம்பவங்கள் எல்லாம் அரங்கேறிய நிலையில் அதற்கு ஒருபடி மேல் சென்று போக்குவரத்து சிக்னல் பேட்டரிகளையும் திட்டம் போட்டு திருடும் சம்பவங்கள் பெங்களுரில் அரங்கேறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த சில மாதங்களாகவே பெங்களூருவில் அடுத்தடுத்து போக்குவரத்து சிக்னல் பேட்டரிகள் செயலிழந்துவுள்ளது.என்ன காரணம்? என்ன நடந்தது? என அறிந்துக்கொள்ள போலீசார் முயற்சிக்கவே அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள் அரங்கேறியதைக் கண்டறிந்தனர்.
இதில் பெங்களூரு, சிக்கபனாவரத்தைச் சேர்ந்த 30 வயதான எஸ் சிக்கந்தர் மற்றும் 29 வயதான அவரது மனைவி நஸ்மா சிக்கந்தர் ஆகிய இருவரும் திட்டம் போட்டு போக்குவரத்து சிக்னல் பேட்டரிகளை சரி செய்கிறோம் என திருடியுள்ளனர். மேலும் கடந்த ஜூன் 2021 மற்றும் ஜனவரி 2022 மாதங்களில் பெங்களூரு நகரம் முழுவதும் உள்ள 68 போக்குவரத்து சந்திப்புகளில் இருந்து 230 க்கும் மேற்பட்ட பேட்டரிகளை திருடியுள்ளதை போலீசார் கண்டறிந்தனர்.
இதனையடுத்து இவர்களைக் கைது செய்த போலீசார், என்ன நடந்தது? என தொடர் விசாரணை நடத்திவந்துள்ளனர். அப்போது தான் போலீசாரே ஆச்சரியப்படும் வகையில் திருட்டு சம்பவங்கள் எல்லாம் நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இரவில் வந்தால் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால், பகலில் இந்த போக்குவரத்து சிக்னல் செயல்படவில்லை எனவும், இதனை சரிசெய்கிறோம் என்ற பெயரில் பெங்களூரு நகரம் முழுவதும் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நூதன முறையில் திருடிய தம்பதியினரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதுவரை வேறு என்னென்ன திருட்டு சம்பவங்களில் நீங்கள் ஈடுபட்டுள்ளார்களா? இல்லை இவர்களைப் போன்று வேறு யாரேனும் இவர்களின் கொள்ளை சம்பவத்திற்கு உதவியாக இருந்துள்ளார்களா? என்ற கோணத்தில் தொடர் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் இதுவரை சுமார் 230க்கும் மேற்பட்ட போக்குவரத்து சிக்னல் பேட்டரிகளை திருடியுள்ளனர். இதோடு மட்டுமின்றி இந்த தம்பதியினர்கள் திருடிய 230க்கும் மேற்பட்ட பேட்டரிகளை கிலோ 100 ரூபாய்க்கு விற்றதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
இப்படி நூதன முறையைில் நடத்தப்பட்ட திருட்டு சம்பவம் பெங்களுரு நகர் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு போக்குவரத்து காவல்துறையினரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது என்று தான் கூற வேண்டும். இதோடு இன்னும் எப்படியெல்லாம்? எதையெல்லாம் திருடப்போறீங்கன்னு தெரியல என்ற கேள்விகள் அதிகளவில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.