Opposition Meet: "அரசியல் சூழலை மாற்றியமைக்கப்போகும் எதிர்க்கட்சிகளின் கூட்டம்?" நாட்டை திரும்பி பார்க்க வைத்த பெங்களூரு
தொகுதி பங்கீடு, குறைந்தபட்ச செயல் திட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் அனைத்து கட்சிகளிடையேயும் ஒருமித்த கருத்து எட்ட வைக்கும் வகையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் தொடரந்து நடத்தப்படும் என கூறப்படுகிறது.
ஒட்டு மொத்த நாட்டின் கவனமும் பெங்களூரு பக்கம் திரும்பியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் இன்று இரவு தொடங்குகிறது. வரவிருக்கும் மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த வகுக்க வேண்டிய வியூகங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளது.
நாட்டை திரும்பி பார்க்க வைத்த பெங்களூரு:
கடந்த இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக நாட்டின் முக்கிய தலைவர்கள் பெங்களூருவில் கூடுகின்றனர். முதல் முறையாக, கடந்த மே மாதம், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பதவியேற்பு விழாவுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் சென்றிருந்தனர்.
கடந்த மாதம், பிகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நடைபெற்றது. இரண்டாவது கூட்டம், காங்கிரஸ் ஆளும் இமாச்சல பிரதேசத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், வானிலை காரணமாக பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. தொகுதி பங்கீடு, குறைந்தபட்ச செயல் திட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் அனைத்து கட்சிகளிடையேயும் ஒருமித்த கருத்து எட்ட வைக்கும் வகையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் தொடரந்து நடத்தப்படும் என கூறப்படுகிறது.
பாஜகவுக்கு எதிராக அமையுமா மெகா கூட்டணி?
இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பெங்களூருவுக்கு சென்றுள்ளனர்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, பாஜகவை கடுமையாக தாக்கி பேசினார். "எதிர்க்கட்சிகளை எதிர்ப்பதற்கு தான் ஒருவனே போதும் என பிரதமர் கூறியிருந்தார். 30 கட்சிகளை கூட்டணியில் இணைக்கும் தேவை எங்கிருந்து வந்தது.
எதிர்கட்சிகள் ஒன்று சேர்வதைக் கண்டு பாஜக பதறிப்போயுள்ளது. எண்ணிக்கையைக் காட்டுவதற்காக, ஏற்கனவே பிளவுபட்ட கட்சிகளை கூட்டணியில் இணைத்து வருகிறது. எதிர்க்கட்சிகள் நீண்ட காலமாக நாடாளுமன்றத்தில் கூட சந்தித்து ஒருங்கிணைத்து வருகின்றன. ஆனால், பாஜக கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ள 30 கட்சிகளை பற்றி பிரதமர் கேள்விப்பட்டதே இல்லை" என்றார்.
இதை தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்களும் பெங்களூருவுக்கு சென்றுள்ளனர். திமுக சார்பில் சென்ற அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினை கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் வரவேற்றார். அவருடன் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலுவும் சென்றுள்ளார்.
ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாத், பிகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவுடன் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் பெங்களூரு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
பெங்களூருவில் வந்திறங்கிய அகிலேஷ் யாதவ், செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாட்டின் மக்கள் தொகையில் 2/3 மக்கள் பாஜகவை தோற்கடிக்கப் போகிறார்கள். நாட்டு மக்கள் பா.ஜ.க.வுக்கு பெரிய தோல்வியை கொடுப்பார்கள் என நம்புகிறேன். பா.ஜ.க அழிந்து விடும் என நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் கருத்துகள் வருகின்றன" என்றார். இந்திய அரசியலை எதிர்க்கட்சிகளின் கூட்டம் மாற்றியமைக்கப்போவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக 26 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.