"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
ஜம்மு காஷ்மீர் பொதுக்கூட்டத்தில் பேசி கொண்டிருந்தபோது காங்கிரஸ் தலைவர் கார்கே மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. கடந்த 25ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடந்தது. வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது. வரும் அக்டோபர் மாதம் 8ஆம் தேதி, தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது.
தேர்தல் கூட்டத்தில் மயங்கி விழுந்த கார்கே:
ஜம்மு காஷ்மீரில் பாஜகவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க இந்தியா கூட்டணி முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில், தேசிய மாநாட்டு கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த நிலையில், கத்துவா மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, பொதுக் கூட்டத்தில் பேசி கொண்டிருந்தபோது கார்கே மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மயங்கி விழவிருந்த காங்கிரஸ் தலைவரை மேடையில் இருந்தவர்கள் தாங்கி பிடித்தனர். அவரை நாற்காலியில் அமரவைத்து ஆசுவாசப்படுத்தினர்.
அடுத்து நடந்தது என்ன?
சிறிது நேரத்திலேயே அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். கார்கேவின் ரத்த அழுத்தத்தில் மாற்றம் இருப்பதாக கூறினர். கொஞ்ச நேரத்திலேயே, மேடையில் மீண்டும் பேச வந்த அவர், "மாநில அந்தஸ்தை மீட்க போராடுவோம். எனக்கு 83 வயதாகிறது.
#WATCH | Jammu and Kashmi: Congress President Mallikarjun Kharge became unwell while addressing a public gathering in Kathua. pic.twitter.com/OXOPFmiyUB
— ANI (@ANI) September 29, 2024
நான் அவ்வளவு சீக்கிரம் சாகப் போவதில்லை. பிரதமர் நரேந்திர மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை நான் உயிருடன் இருப்பேன். நான் பேச விரும்புகிறேன். ஆனால், தலைசுற்றல் காரணமாக கொஞ்சம் அமர்ந்து விட்டேன். தயவுசெய்து என்னை மன்னியுங்கள்" என்றார்.
கார்கேவின் ரத்த அழுத்தம் குறைந்துள்ளதாகவும், தான் நன்றாக இருப்பதாக அவர் கூறிய பிறகும், மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்று இரவு உதம்பூர் மாவட்டத்தில் நடைபெறும் பேரணியில் கலந்து கொள்வாரா என்பது இன்னும் தெரியவில்லை.