கர்னல் சோபியா குரேஷியின் சாதி குறித்து பேசிய பாஜக அமைச்சர்.. லெப்ட் ரைட் வாங்கிய நீதிமன்றம்!
சோபியா குரேஷி சாதி குறித்து பேசிய பாஜக அமைச்சர் விஜய் ஷா மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என விஜய் ஷா குறிப்பிட்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

கர்னல் சோபியா குரேஷி குறித்து இழிவாக பேசிய பாஜக அமைச்சர் விஜய் ஷா மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ய மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் குறித்த செய்தியாளர் சந்திப்பில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கை குறித்து விவரித்த கர்னல் சோபியா குரேஷியை பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சகோதரி எனக் குறிப்பிட்டு பேசிய விஜய் ஷாவை பல்வேறு தரப்பினர் கண்டித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரித்த மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாட்டுக்கு பெருமை சேர்த்த 'சிங்கப்பெண்'
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்தியா ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ராணுவ நடவடிக்கை குறித்த விவரங்களை நாட்டு மக்களுக்கும் உலக நாடுகளுக்கும் விளக்கும் வகையில் செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது, ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவரங்களை சிறப்பாக விளக்கியவர் இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரி கர்னல் சோபியா குரேஷி. உலக நாடுகளே உற்று கவனித்த செய்தியாளர் சந்திப்பை சிறப்பாக கையாண்டு பாராட்டை பெற்றார் சோபியா குரேஷி.
சோபியா குரேஷி சாதி குறித்து பேசிய பாஜக அமைச்சர்:
இப்படி, நாடே பெருமிதத்துடன் பார்த்த சோபியா குரேஷி குறித்து இழிவாக பேசியிருந்தார் மத்தியப் பிரதேச பழங்குடி விவகாரங்கள் துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான விஜய் ஷா. சோபியா குரேஷியை பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் சகோதரி எனக் குறிப்பிட்ட விஜய் ஷா, "அவர்கள் (பாகிஸ்தான் பயங்கரவாதிகள்) இந்துக்களின் ஆடைகளை கழற்றி கொன்றார்கள்.
ஆனால், மோடியோ, அவர்களின் சகோதரியை (சோபியா குரேஷி) அனுப்பி அவர்களுக்கு பதிலடி கொடுத்தார். எங்களால் அவர்களின் ஆடைகளைக் கழற்ற முடியவில்லை. அதனால் அவர்களின் சமூகத்திலிருந்து ஒரு மகளை அனுப்பினோம்.
லெப்ட் ரைட் வாங்கிய நீதிமன்றம்:
நீங்கள், எங்களின் சகோதரிகளை விதவை ஆக்கினீர்கள். எனவே, உங்கள் சமூகத்தின் ஒரு சகோதரியை வைத்து உங்களை நிர்வாணமாக்கி உள்ளோம். உங்களை பழிவாங்க, உங்களின் சாதியை சேர்ந்த பெண்ணை பாகிஸ்தானுக்கு அனுப்ப முடியும் என்பதை மோடி நிரூபித்தார்" என இழிவாக பேசினார்.
இதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரித்த மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. விஜய் ஷா மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ய மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





















