முதல்வரின் காலைத்தொட்டு கும்பிட்ட கலெக்டர்கள்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!
பாஜக செய்தித் தொடர்பாளர் கே.கிருஷ்ண சாகர் ராவ் கூறுகையில், கேசிஆர் மாநிலத்தில் ஒருபுதுவித அரசு அதிகாரிகளுக்கான கலாச்சாரத்தை உருவாக்கி வருகிறார். ஆட்சியர்கள் மரியாதை நிமித்தமாக முதல்வரின் காலில் விழ நினைத்திருந்தால் அதைத் தனிப்பட்ட முறையில் செய்திருக்க வேண்டும். அரசு விழாவில் செய்திருக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் காலைத் தொட்டி வணங்கி அம்மாநிலத்தின் இரண்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சித்திப்பேட்டில் ஓர் அரசு நிகழ்ச்சி நடைபெற்றது. சித்திப்பேட் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் திறப்புவிழா நடந்தது. முதல்வர் சந்திரசேகர ராவ் விழாவில் கலந்து கொண்டு மாவட்ட தலைமையகத்தைத் திறந்துவைத்தார். அந்த நிகழ்ச்சியின்போது சித்திப்பேட் ஆட்சியர் பி.வெங்கடராமி ரெட்டி முதல்வர் சந்திரசேகர் ராவின் காலில் விழுந்து ஆசி பெற்றார். முதல்வர் தடுக்க முயன்றும் ஆட்சியர் வாஞ்சையுடன் ஆசி பெற்றார். அப்போது மேடையில் தெலங்கானா தலைமைச் செயலர் சோமேஷ் குமாரும் இருந்தார். அரசு விழாவில் அரசு ஊழியர் ஒருவர் முதல்வரின் காலில் விழுந்து ஆசி பெற்றது அங்கேயே சிறு சலசலப்பை ஏற்படுத்தியது. ஐஏஸ்எஸ் அதிகாரிகளின் மாண்பை ஆட்சியர் ராமிரெட்டி அடகுவைத்துவிட்டார் என்ற விமர்சனம் எழுந்தது. முதல்வரை திருப்திப்படுத்தவே ஆட்சியர் இப்படி நடந்துகொண்டார் என எதிர்க்கட்சிகள் வறுத்தெடுத்தன.
இதனால், ஆட்சியர் ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டார். அதில், ”முதல்வர் சந்திரசேகர் ராவ் தனது தந்தையின் வயதை ஒத்தவர். சுபநிகழ்ச்சிகள் நடக்கும்போது வயதில் மூத்தவர்களிடன் ஆசிர்வாதம் வாங்குவதென்பது தெலங்கானாவின் கலாச்சாரம். அப்படித்தான் நான் முதல்வரிடம் ஆசி பெற்றேன். என் தந்தையைப் போல் அவரைக் கருதுகிறேன். புதிய ஆட்சியர் அலுவலகம் திறப்பும் ஒரு சுப நிகழ்ச்சி தானே. அதனாலேயே நான் முதல்வரிடம் ஆசி பெற்றேன். ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம். அதன் வெளிப்பாடகவே நான் ஆசி பெற்றேன். இதை தயவுசெய்து சர்ச்சையாக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஊழல் தடுப்பு செயற்பாட்டாளர் விஜய் கோபால் இது குறித்து கூறும்போது ஒரு அரசாங்க ஊழியர் இவ்வாறு நடந்துகொள்வது கடும் கண்டனத்துக்குரியது. இப்படி தனிப்பட்ட விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் எப்படி தனது கடமைகளை நடுநிலையோடு செயல்படுத்துவார் எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சித்திப்பேட் ஆட்சியர் வெங்கடராமியின் செயலுக்கு பொதுமக்களும், எதிர்க்கட்சியினரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சித்திப்பேட் நிகழ்ச்சியை முடித்துக் கொண்ட முதல்வர் சந்திரசேகர் ராவ், கம்மாரெட்டி மாவட்டத்துக்குச் சென்றார். அங்கும் இதேபோல் அரசு விழாவில் பங்கேற்றார். அங்கும் கம்மாரெட்டி ஒருங்கிணைந்த ஆட்சியர் அலுவலகம் திறக்கப்பட்டது. அப்போது, ஆட்சியர் ஏ.சரத் முதல்வரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். அடுத்தடுத்து ஆட்சியர்கள் இவ்வாறு நடந்து கொண்டது அம்மாநில மக்களை அதிருப்தியடையச் செய்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஷ்ரவண் தசோஜு, ஆட்சியரின் செயல் அருவருக்கத்தக்கது. தெலங்கானாவில் பல மாவட்டங்களிலும் அதிகாரிகள் முதல்வருக்கு அடிமையாகத்தான் செயல்படுகின்றனர் என்பதற்கு இவரே ஒரு உதாரணம் என்றார். அதிகாரிகள் அரசியல் சாசனத்துக்குக் கட்டுப்பட்டவர்களே தவிர அரசியல்வாதிகளுக்கு அல்ல என்று கூறியிருக்கிறார். பாஜக செய்தித் தொடர்பாளர் கே.கிருஷ்ண சாகர் ராவ் கூறுகையில், கேசிஆர் மாநிலத்தில் ஒருபுதுவித அரசு அதிகாரிகளுக்கான கலாச்சாரத்தை உருவாக்கி வருகிறார். ஆட்சியர்கள் மரியாதை நிமித்தமாக முதல்வரின் காலில் விழ நினைத்திருந்தால் அதைத் தனிப்பட்ட முறையில் செய்திருக்க வேண்டும். அரசு விழாவில் செய்திருக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.