கிரிக்கெட் பயிற்சிக்கு வந்த சிறுமிக்கு பாலியல் வன்முறை... கோச் மீது பாய்ந்தது போக்சோ..!
போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த நான்கு பேர் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவரை புதுச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர்
புதுச்சேரியில் கிரிக்கெட் பயிற்சிக்கு வந்த சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக மூத்த கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிக்கெட் பயிற்சிக்காக வந்த சிறுமியிடம் பயிற்சி அளிப்பதாகக் கூறி அவரது உடலில் பல இடங்களில் தொட்டதாகவும், வேண்டாம் என மறுத்தும் பயிற்சியாளர் தொடர்ந்து அவ்வாறு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தன்மீது பயிற்சியாளர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி பயிற்சி நிர்வாகத்தைச் சேர்ந்த நான்கு பேரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் நிர்வாகம் அதுகுறித்துக் காவல்துறையிடம் எடுத்துச் செல்ல மறுத்துள்ளது. இதையடுத்து மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் அந்த சிறுமி புகார் அளித்த நிலையில் தற்போது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த நான்கு பேர் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவரை புதுச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரில் பயிற்சி மைய நிர்வாகியின் மகன் ரோஹித்தும் ஒருவர். இவர் பிரபல திரைப்பட இயக்குநர் சங்கரின் உறவினர்.
கைதுசெய்யப்பட்ட பயிற்சியாளர்
காவல்துறை தரப்பில் கூறுகையில், ‘பயிற்சிக்காக வந்த 16 வயது சிறுமியிடம் தான் அவளை மிகவும் விரும்புவதாகவும் தனக்கு உடன்படவில்லை என்றால் பயிற்சி அளிக்கமுடியாது எனவும் அந்த பயிற்சியாளர் மிரட்டியுள்ளார். மேலும் அவரின் அந்தரங்கப் பகுதிகளில் அவர் அனுமதியின்றி கைவைத்துள்ளார். இதுகுறித்து அந்தச் சிறுமி பயிற்சி நிர்வாகத்திடம் கூறினாலும் அவர்கள் இதனை மறைத்துள்ளனர். மேலும் புகார் அளித்த விவரம் தெரிந்த பயிற்சியாளர் அந்தச் சிறுமியின் வீட்டுக்குத் தனது மனைவியுடன் சென்று புகாரைத் திரும்பப் பெறும்படி கெஞ்சிக் கேட்டுள்ளார்.ஆனால் அந்தச் சிறுமி புகாரைத் திரும்பப் பெற மறுத்துவிட்டார்’ எனக் கூறுகின்றனர்.
முன்னதாக சென்னையில் இதே போன்று தடகளப் பயிற்சியாளர் ஒருவர் தன்னிடம் பயிற்சி எடுத்துக்கொள்ள வந்த பெண்களிடம் சீண்டலில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை நந்தனத்தை சேர்ந்த தடகள பயிற்சியாளர் நாகராஜன். இவர் ஜிஎஸ்டி அலுவலக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தனியாக ப்ரைம் ஸ்போர்ட்ஸ் என்னும் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.அண்மையில் இவர் நடத்திவரும் ஸ்போர்ட்ஸ் பயிற்சி மையத்தில் தடகள வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வீராங்கனை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, பூக்கடை காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் நாகராஜன் மீது 5 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இதனையடுத்து, கடந்த மே 28-ம் தேதி நாகராஜன் கைது செய்யப்பட்டு போக்சோ நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தனக்கு ஜாமீன் வழங்க கோரி நாகராஜன் தாக்கல் செய்த மனு, நீதிபதி முகமது பரூக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாலும், முழுமையடையாத காரணத்தாலும் ஜாமீன் வழங்க கூடாது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, நாகராஜனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், பயிற்சியாளர் நாகராஜனால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவின் துணை ஆணையர், எண்ணிற்கு (9444772222) தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம் என்றும், புகார் கொடுப்பவர்களின் விவரங்கள் வெளியே தெரியாமல், ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.