Supreme Court Expansion: கூடுதலாக 27 நீதிமன்றங்கள்.. 51 நீதிபதிகளுக்கு அறைகள்.. தலைமை நீதிபதியின் மெகா அறிவிப்பு!
உச்ச நீதிமன்ற வளாகத்தில் கூடுதலாக 27 நீதிமன்றங்களும் 51 நீதிபதிகளுக்கு அறைகள் கட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு வருவதாக இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். உச்ச நீதிமன்ற வளாகத்தில் கூடுதலாக 27 நீதிமன்றங்களும் 51 நீதிபதிகளுக்கு அறைகள் கட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
விரிவாக்கம் செய்யப்பட உள்ள உச்ச நீதிமன்றம்:
தற்போது, உச்ச நீதிமன்ற வளாகத்தில் 16 நீதிமன்றங்களும் இரண்டு பதிவாளர் நீதிமன்றங்களும் இயங்கி வருகின்றன. உச்ச நீதிமன்றம் அதிகபட்சமாக 32 நீதிபதிகளை பணியமர்த்தலாம்.
உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற 77ஆவது சுதந்திர தின விழாவில் பேசிய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், உச்ச நீதிமன்ற விரிவாக்கம் குறித்து பேசுகையில், "நீதிமன்றங்களை மிகவும் அணுகக்கூடியதாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்றுவதற்கு முன்னுரிமை அடிப்படையில் நீதிமன்ற உள்கட்டமைப்பை மாற்றியமைத்தல் அவசியம்.
கூடுதலாக நீதிமன்றங்கள்:
புதிய திட்டத்தின் முக்கியத்துவம் நீதித்துறை உள்கட்டமைப்பை நவீனப்படுத்துவதாக இருக்கும். 27 கூடுதல் நீதிமன்றங்கள், 51 நீதிபதிகள் அறைகள், 4 பதிவாளர் நீதிமன்ற அறைகள், 16 பதிவாளர் அறைகள் மற்றும் வழக்குரைஞர்களுக்குத் தேவையான இதர வசதிகளைக் கொண்ட புதிய கட்டிடம் ஒன்றைக் கட்டுவதன் மூலம் உச்ச நீதிமன்றத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். இந்த விரிவாக்கம் இரண்டு கட்டங்களாக முன்மொழியப்பட்டுள்ளது" என்றார்.
நீதித்துறையின் முக்கியத்துவம் குறித்து பேசிய அவர், "வரையறுக்கப்பட்ட அரசியலமைப்பு வரம்புகளுக்குள் அரசு நிறுவனங்கள் செயல்படுவதை உறுதி செய்வதில் நீதித்துறை முக்கிய பங்காற்றுகிறது. தனிநபர்கள் தங்கள் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாக்க ஒரு பாதுகாப்பான ஜனநாயக இடத்தை நீதிமன்றங்கள் வழங்குகின்றன.
நீதித்துறையின் முக்கியத்துவம்:
நீதிக்கான அணுகலை மேம்படுத்துவதன் மூலமும், அரசியலமைப்பு விழுமியங்களை மேம்படுத்துவதன் மூலமும் அரசு நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாக உச்ச நீதிமன்றம் இருந்து வருகிறது. இந்திய நீதித்துறையின் வரலாறு என்பது இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களின் வரலாறே என்று கடந்த 76 வருடங்களாக எடுத்துரைத்து வருகிறது.
நமது வரலாறு நமக்கு எதையாவது கற்றுத் தருகிறது என்றால், அது இதுதான். நீதிமன்றங்களுக்கு பெரியவர்கள், சிறியவர்கள் என எதுவுமில்லை. தகராறுகள் மற்றும் குறைகளை ஆராய்ந்து தீர்ப்பு வழங்குவதன் மூலம், நீதிமன்றங்கள் அரசியலமைப்பு கடமையை மட்டுமே செய்கின்றன.
விரிவாக்க திட்டத்தின் முதல் கட்டத்தில், நீதிமன்ற அருங்காட்சியகம் மற்றும் இணைப்பு கட்டிடம் இடிக்கப்படும். அங்கு, 15 நீதிமன்ற அறைகள், நீதிபதிகளுக்கு அறைகள், உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் (SCBA) நூலகம், பார் அசோசியேஷன் அலுவலகங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் பதிவு சங்கம் ஆகியவற்றுடன் புதிய கட்டிடம் கட்ட ப்படும்.
விரிவாக்க திட்டத்தின் இரண்டாவது கட்டமாக, 12 நீதிமன்ற அறைகள், நீதிபதிகள் அறைகள், பதிவாளர் நீதிமன்றங்கள் ஆகியவற்றைக் கொண்ட புதிய கட்டிடத்தின் இரண்டாம் பகுதியைக் கட்டுவதற்காக தற்போதுள்ள நீதிமன்ற வளாகத்தின் சில பகுதிகள் இடிக்கப்படும்" என்றார்.