பரபரப்பு.. மும்பையை அதிரவிட்ட பார்சல்.. சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லவிருந்த 'அணு ஆயுதம்'
பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் இந்திய பாதுகாப்புக்கு பெரும் சவாலாக இருந்து வரும் நிலையில், இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அணு ஆயுத திட்டத்தில் பயன்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட இயந்திரத்தை இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் மும்பை துறைமுகத்தில் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இருந்து பாகிஸ்தான் நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலை மும்பையில் வைத்து தடுத்து நிறுத்திய அதிகாரிகள் அணு ஆயுத திட்டத்தில் பயன்படுத்தக்கூடிய இயந்திரத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்ற 'பார்சல்':
சீனாவில் உள்ள ஷெகோவ் துறைமுகத்தில் இருந்து கராச்சி துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த பார்சல், இன்னும் இந்திய அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதில், 2 மேம்பட்ட கணினி எண் கட்டுப்பாடு இயந்திரங்கள் இருந்துள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டுக்கும் ராணுவ பயன்பாட்டுக்கும் இதை பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.
இந்த இயந்திரத்தை இத்தாலியில் உள்ள ஜிகேடி நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது. கடந்த ஜனவரி மாதம், 9ஆம் தேதி, சிஎம்ஏ சிஜிஎம் அட்டிலா சரக்கு கப்பலில், அணு ஆயுத திட்டத்தில் பயன்படுத்தக்கூடிய இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. காஸ்மோஸ் இன்ஜினியரிங் என்ற நிறுவனத்திற்கு இந்த பார்சல் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம், தெர்மோ எலக்ட்ரிக் கருவிகளை ஜிகேடி நிறுவனத்திடமிருந்து காஸ்மோஸ் இன்ஜினியரிங் நிறுவனம் மூலம் வாங்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. அப்போதில் இருந்தே, காஸ்மோஸ் இன்ஜினியரிங் நிறுவனம், தங்களின் சந்தேக வளையத்தில் இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்திய உளவுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல்:
கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் தேதி அனுப்பப்பட்ட தெர்மோ எலக்ட்ரிக் கருவிகளை இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விவரம் அறிந்தவர் இதுகுறித்து கூறுகையில், "கடந்த ஜனவரி 22ஆம் தேதி, சரக்கு கப்பலானது மும்பையில் உள்ள நவா ஷேவா துறைமுகத்திற்கு வந்துள்ளது. இந்திய உளவுத்துறை அதிகாரிகள் அளித்த தகவல்களின்படி, அந்த பார்சலை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்" என்றார்.
அந்த பார்சலை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பை (DRDO) சேர்ந்த நிபுணர்கள், ஆய்வு செய்து வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் ஏவுகணை திட்டத்தில் இந்த இயந்திரங்களை பயன்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.
பாகிஸ்தானுக்கு இம்மாதிரியான ஆயுதங்களை சீனா அனுப்புவது இது முதல்முறை அல்ல. கடந்த 2020ஆம் ஆண்டும், இன்டஸ்ட்ரியல் ட்ரையர் (உலர்த்த பயன்படும் கருவி) என்ற பெயரில் நுண்ணுயிரிகளை கொல்லப் பயன்படுத்தப்படும் ஆட்டோஎன்கிளேவை அனுப்ப சீனா முயற்சி செய்தது.
பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் இந்திய பாதுகாப்புக்கு பெரும் சவாலாக இருந்து வரும் நிலையில், இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.