Childrens Day 2022: நவீன இந்தியாவின் சிற்பி.. குழந்தைகள் தினமாக நேருவின் பிறந்தநாள் இன்று.. சுவாரஸ்ய தகவல்கள்..
Children's Day 2022: நவீன இந்தியாவின் சிற்பி என்றழைக்கப்படும் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று.
Jawaharlal Nehru : நவீன இந்தியாவின் சிற்பி என்றழைக்கப்படும் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர்.
நேரு, உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலகாபாத்தில் 1889 ஆம் ஆண்டு நவம்பர்,14 ஆம் தேதி பிறந்தார். இவருடைய தந்தை மோதிலால் நேரு வழக்கறிஞர். தாயர் சொரூப ராணி. செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த நேரு, காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சுதந்திர போராட்டத்தை தன்னை ஈடுபடுத்தி கொண்டார். இளம் வயதில் நேருவிற்கு வீட்டிலேயே கல்வி கற்பிக்கப்பட்டது.
சுதந்திர போராட்டமும் நேருவும்:
1920 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கம், 1945 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் பங்கேற்று சிறை சென்றார். வாழ்நாளில் 9 ஆண்டுகள் சிறையில் இருந்தார். அப்போது, வரலாற்றின் காட்சிகள், சுயசரிதை ஆகிய நூல்களை சிறை நாட்களில் எழுதியிருக்கிறார் நேரு.
காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, மேற்கத்திய ஆடைகள் அணிவதைத் தவிர்த்து கதர் உடைகளை உடுத்த தொடங்கினார். காந்தியின் நம்பிக்கையை பெற்றவராகினார். 1947 - ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்றதும் நாட்டின் முதல் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
நவீன இந்தியா:
நாட்டின் வளர்ச்சிக்காக தேவையான திட்டங்களை செயல்படுத்தினார் நேரு. நாட்டில் உயர்கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தினார். இவருடைய வெளியுறவுக் கொள்கைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
செல்வ செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர் நாட்டிற்காக தன்னை அர்ப்பணித்து கொண்டவர்.
நேரு மாமா:
குழந்தைகள் மீது மிகவும் அன்பு கொண்டவர். அனைவராலும் நேரு மாமா என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.
ரோஜாவின் ராஜா:
ரோஜா மலரை தன் சட்டைப் பையில் அணிவது நேருவுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இவர் ரோஜாவின் ராஜா என்று அழைக்கப்பட்டார்.
ஹோம் டியூடன்:
நேரு இளம் வயதில் பள்ளிக்கு சென்று கல்வி பெறவில்லை. ஹோம் டியூசன் முறையில் தனி அசிரியர்கள் நேருவுக்கு பாடம் கற்பித்தனர். மேற்படிப்புக்காக இங்கிலாந்தில் உள்ள கல்வி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டார். ஹோம் டியூடர் பெர்டினாண்ட் ப்ரூக்ஸ் நேருவுக்கு புத்தங்கள் மற்றும் அறிவியல் சிந்தனைகள் அறிமுகத்தின் ஆர்வத்தை ஊட்டினார்.
உயில்:
நேரு தனக்கு 70 வயதானபோது ஓர் உயில் எழுதினார். உயிலின் விவரம்- ‘ நான் இறந்த பிறகு எவ்விதமான மதச் சடங்குகளும் செய்ய வேண்டாம். எனது உடலை எரியூட்ட வேண்டும். அஸ்தியில் கையளவு எடுத்து கங்கையில் கரைக்க வேண்டும். அது இந்தியக் கரைகளைத் தூய்மைப்படுத்தி கொண்டு, அலைகின்ற கடலுக்குள் அடித்துச் செல்லப்பட வேண்டும். இந்தியாவில் இருந்து என்னை ஒருபோதும் பிரிக்க முடியாதவனாக ஆக்க வேண்டும்.’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நேருவின் தேசப்பற்றின் பிரதிபலிப்பே இது!
புத்தக காதலர்:
நேரு தனக்கு உடல்நிலை சரியில்லாத நிலையிலும் அலுவலக பணிகளை மேற்கொண்டார். மகள் இந்திரா ஓய்வெடுங்கள் என்று கூறியும் தனது பணிகளை முடித்த பிறகே தூங்க சென்றுள்ளார். தன் உடல்நலம் குன்றிய நிலையிலும் ஒரு புத்தகத்தை எடுத்து படித்திருக்கிறார் நேரு. 1964, மே,27 -ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நேரு மறைந்தார்.
புத்தங்கள்:
தந்தை மகளுக்கு எழுதிய கடிதம் - 10 வயது இந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய கடிதங்கள், சுயசரிதம், உலக சரித்திரம், இந்திய தரிசனம், இந்தியாவும் உலகமும், இந்தியாவில் பதினொரு மாதங்கள், சமீபகால கட்டுரைகள், நாம் எங்கே இருக்கிறோம்? யுத்தமும்- சீனாவும்-ஸ்பெயினும் அகிய நூல்கள் நேருவின் எழுத்தாற்றலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகள். அவசியம் வாசிக்க வேண்டியவையும் கூட..
இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா வழங்கி கெளரவிக்கப்பட்டார். ஆசிய ஜோதி, சமாதானப்புறா ஆகிய விருதுகளாலும் நேருவை சிறப்பிக்கப்பட்டுள்ளார்.