இனி, வாரத்துல 7 நாளும் கடைகள் திறந்திருக்கும்.. நோ டென்ஷன் மக்களே!
வாரத்தில் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்கும் வகையில் சத்தீஸ்கரில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் வணிகர்கள், இனி தங்கள் கடைகளை வாரத்தில் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் திறந்து வைக்கலாம் என அம்மாநில முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் அறிவித்துள்ளார். இதற்காக புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வணிகர்களுக்கு பயனளிப்பது மட்டுமல்லாமல், மாநிலத்தின் பொருளாதாரத்தையும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சத்தீஸ்கரில் புதிய சட்டம்:
சத்தீஸ்கர் அரசு வர்த்தகத்தை அதிகரிக்கவும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் புதிய கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தை அமல்படுத்தியது. வாரத்தில் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
சத்தீஸ்கரில் முன்னதாக வாரத்தில் ஒரு நாள் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட வேண்டியிருந்தது. ஆனால், இப்போது வர்த்தகர்கள் தங்கள் வசதிக்கேற்ப செயல்பட நெகிழ்வுத்தன்மையைப் பெற்றுள்ளனர்.
இருப்பினும், ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதையும் சத்தீஸ்கர் அரசாங்கம் உறுதி செய்துள்ளது. புதிய சட்டத்தின் கீழ் ஒவ்வொரு தொழிலாளிக்கும் கட்டாய வார விடுமுறை வழங்கப்படும். மேலும், எந்தவொரு பணியாளரையும் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய வைக்க முடியாது.
கடைகளுக்கு இனி லீவு இல்லை:
கூடுதலாக, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க அனைத்து கடை உரிமையாளர்களும் தொழிலாளர் நலத் திட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில், "இந்த முடிவு வணிகம் செய்வதை எளிதாக்குவதை வலுப்படுத்தும். சிறு வணிகர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கும். கடை செயல்பாடுகளில் அதிக நெகிழ்வுத்தன்மையுடன், வணிக நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும். இது, மாநிலத்தின் வருவாயை அதிகரிக்கும். இருப்பினும், இந்த விதி மதுபானக் கடைகளுக்குப் பொருந்தாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் லக்கன் லால் தேவாங்கன் கூறுகையில், "முதலமைச்சர் விஷ்ணு தியோ சாயின் அரசாங்கம் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. சத்தீஸ்கரில் கடைகள் 24 மணி நேரமும் திறந்திருப்பதால், மாநிலவாசிகள், குறிப்பாக நடுத்தர மற்றும் சிறு வணிகர்கள் இதனால் பெரிய நன்மைகளைப் பெறுவார்கள்.
முதல் முறையாக, சத்தீஸ்கரில் அனைத்து கடைகளும் திறந்திருக்கும். இது வேலைவாய்ப்பையும் உருவாக்கும். சத்தீஸ்கரின் நகரங்களும் மாவட்டங்களும் பெருநகரங்களாக வளர்ச்சியடையப் போகின்றன. வளர்ச்சியின் வேகம் மேலும் அதிகரிக்கும். தொழிலதிபர்கள் மத்தியில் மகிழ்ச்சி அலை வீசுகிறது" என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

