Chattisgarh Elections : துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நக்சல்கள்.. சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் உச்சக்கட்ட பதற்றம்
பந்தா கிராமத்தில் வாக்குச்சாவடி மையம் அருகே தேர்தல் பணியில் இருந்த மாவட்ட ரிசர்வ் காவலர் மீது நக்சல்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலின் முன்னோட்டமாக கருதப்படும் ஐந்து மாநில தேர்தல் இன்று தொடங்கியுள்ளது. சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, மிசோரம் மற்றும் சத்தீஸ்கரின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
சத்தீஸ்கர் தேர்தலில் பரபரப்பு:
சத்தீஸ்கரில் பஸ்தர், தண்டேவாடா, கான்கேர், கபீர்தம் மற்றும் ராஜ்நந்தகன் ஆகிய நக்சல் பாதிப்புள்ள மாவட்டங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பந்தா கிராமத்தில் வாக்குச்சாவடி மையம் அருகே தேர்தல் பணியில் இருந்த மாவட்ட ரிசர்வ் காவலர் மீது நக்சல்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பாதுகாப்பு படையினர், இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தி வருவதாக சுக்மா மாவட்ட காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இந்த பதில் தாக்குதல் 10 நிமிடம் நீடித்ததாகவும் இறுதியில், நக்சல்கள் தங்களின் தாக்குதலை நிறுத்தி கொண்டதாகவும் காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
"பந்தா வாக்குச் சாவடியிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெளிப்புற பகுதிகளில் தேர்தல் பணிக்காக பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டனர். தற்போது, பாதுகாப்பு படை வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். இன்னும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது" என காவல்துறை தரப்பு கூறுகிறது.
நக்சல்கள் நடத்திய தாக்குதல்:
இன்று காலை, மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தின் தொண்டமார்கா பகுதியில் நக்சல்கள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் மத்திய போலீஸ் ரிசர்வ் படையின் (CRPF) வீரர் ஒருவர் காயமடைந்தார். முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 20 தொகுதிகளில் 12 தொகுதிகள், பஸ்தர் மாவட்டத்தில் அமைந்துள்ளன. 3 மணி நிலவரப்படி சத்தீஸ்கரில் 60.92 சதவகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாஜகவின் செல்வாக்கு மிக்க மாநிலங்களில் ஒன்றான சத்தீஸ்கரில், 15 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில்தான் காங்கிரஸ் முதல்முறையாக வெற்றிபெற்றது. அக்கட்சியின் மூத்த தலைவர் பூபேஷ் பாகல் தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
நக்சல் பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் சத்தீஸ்கரும் ஒன்று.
கடந்த 9 ஆண்டுகளில், (நக்சல்) வன்முறை சம்பவங்கள் 52 சதவீதம் குறைந்துள்ளது. இறப்புகள் (மாவோயிஸ்ட் வன்முறையில்) 70 சதவீதம் குறைந்துள்ளது. பொதுமக்களின் இறப்பு 68 சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயம், நக்சல்களால் பாதிக்கப்பட்ட (எண்ணிக்கை) மாவட்டங்கள் 62 சதவீதம் குறைந்துள்ளன.
சமீபத்தில், காங்கிரஸ் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை சுமத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "நக்சல்களுக்கு காங்கிரஸ் ஊக்கம் அளித்து வருவதாகவும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நக்சல்களிடம் இருந்து சத்தீஸ்கர் விடுவிக்கப்படும்" என்றார்.
இதையும் படிக்க: Mizoram Election 2023: மிசோரம் சட்டப்பேரவை தேர்தல்: வாக்களிக்காமல் சென்ற முதலமைச்சர் - காரணம் என்ன?