Chhatrapati Shivaji Statue : இந்திய பாகிஸ்தான் எல்லையில் சத்ரபதி சிவாஜிக்கு சிலை...கோட்டையில் இருந்து எடுத்து வரப்படும் மண்ணை வைத்து பூமி பூஜை..!
இந்திய பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள காஷ்மீரின் கிரண் , தங்தார் திட்வால் பள்ளத்தாக்கு ஆகிய இரண்டு இடங்களில் சிலை வைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இந்திய பாகிஸ்தான் எல்லை அருகே சத்ரபதி சிவாஜிக்கு அரசு சாரா அமைப்பு ஒன்று சிலை வைக்க உள்ளது. அந்த அமைப்பின் பெயர் அம்ஹி புனேகர்.
நோக்கம் என்ன?
எதிரிகளை எதிர்த்துப் போரிடும் ராணுவ வீரர்கள், சத்ரபதி சிவாஜி மகாராஜின் லட்சியம் மற்றும் தார்மீக விழுமியங்களால் உந்தப்பட்டு, அவரது சிலையை தினமும் பார்த்து, அவரின் வீரத்தை நினைத்துப் போரிடும் வலிமையைப் பெற வேண்டும் என்பதற்காக இந்த சிலை நிறுவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோக்கத்திற்காகவே அம்ஹி புனேகர் அமைப்பு இந்த முயற்சியை எடுத்துள்ளது. இந்திய பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள காஷ்மீரின் கிரண் , தங்தார் திட்வால் பள்ளத்தாக்கு ஆகிய இரண்டு இடங்களில் சிலை வைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
அனுமதி பெற்ற பிறகு சிலை:
காஷ்மீரில் குப்வாரா மாவட்ட ஆட்சியர் டாக்டர் சாகர் தத்தாத்ரேயாவிடம் அனுமதி பெற்ற பிறகு, சிலை நிறுவப்படும். சத்ரபதி சிவாஜி மகாராஜ் அடகேபர் ஸ்மாரக் சமிதி தலைவர் அபய்ராஜ் ஷிரோல், அம்ஹி புனேகர் தலைவர் ஹேமந்த் ஜாதவ் ஆகியோர் இந்த முயற்சியை திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து ஹேமந்த் ஜாதவ் கூறுகையில், "சிலை நிறுவும் பணிக்கான பூமி பூஜை மார்ச் இறுதிக்குள் நடைபெறும். சிவாஜியின் வருகையால் புனிதம் அடைந்த ராய்காட், தோரணா, சிவனேரி, ராஜ்காட், பிரதாப்காட் கோட்டைகளிலிருந்து மண்ணும் நீரும் காஷ்மீருக்கு எடுத்து செல்லப்பட்டு அதை வைத்து பூமி பூஜை மேற்கொள்ளப்படும்" என்றார்.
உத்திகளாலும், துணிச்சலாலும் எதிரிகளை விரட்டியடித்த சிவாஜி மகாராஜ்
இது தொடர்பாக அபய்ராஜ் ஷிரோல் கூறுகையில், "சத்ரபதி சிவாஜி மகாராஜ், தனது உத்திகளாலும், துணிச்சலாலும் எதிரிகளை விரட்டியடித்தார். அவரது கொரில்லா போர் நுட்பங்களை உலகின் பல்வேறு நாடுகள் பின்பற்றுகின்றன.
சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலை இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நிறுவப்பட்டு, எல்லையில் உள்ள இந்திய வீரர்களுக்கு அவரின் கொள்கைகள் உத்வேகம் அளிக்கும்.
இதையும் படிக்க: Tipu Sultan : திப்பு சுல்தான் ஆதரவாளர்களை கொல்லுங்க...கர்நாடக பாஜக தலைவர் பேச்சால் மீண்டும் சர்ச்சை..!
சத்ரபதி சிவாஜி மகாராஜின் இரண்டு சிலைகள் ஜம்மு காஷ்மீரில் ஜனவரி 2022ஆம் ஆண்டு, மராட்டிய படைப்பிரிவால் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சிலைகளில் ஒன்று கடல் மட்டத்திலிருந்து 14800 அடி உயரத்தில் இந்திய பாகிஸ்தான் அருகே நிறுவப்பட்டது. இப்போது மேலும் இரண்டு சிலைகள் புனேவைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் அமைக்கப்பட உள்ளது.
சிவாஜி மகாராஜாவை பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடர்ந்து கொண்டாடி வருகிறது. அதன் கூட்டங்கள் அனைத்திலும் சிவாஜி மகாராஜாவின் புகைப்படங்கள் இடம் பெறாமல் இருக்காது.