தங்கத்தை விடுங்க.. குரங்கை கடத்தி இருக்காங்க.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
பாங்காக்கிலிருந்து சென்னை வந்த பயணி ஒருவர், நீண்ட கைகளை உடைய குரங்கு, சாம்பல் நிற குரங்கு ஆகியவை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினரால் கடந்த ஜூன் 30, ஜூலை 1,2 ஆகிய மூன்று நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது ரூ.65 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு:
கடந்த ஜூன் 30ஆம் தேதி, துபாய் - டாக்கா - கொல்கத்தா - சென்னை வழித்தடத்தில் பயணம் செய்த பயணி ஒருவரை சென்னையில் உள்ள காமராஜர் உள்நாட்டு விமான முனையத்தில் சுங்கத்துறையினர் இடைமறித்து சோதனை செய்தனர். அவரிடம் விசாரித்ததில் பசை வடிவத்தில் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரிடமிருந்து ரூ. 37,78,468 மதிப்புள்ள 409 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த ஜூலை 1 ஆம் தேதி, சுங்கத்துறையின் விமான நிலைய புலனாய்வு பிரிவு சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவரின் உடமைகள் சந்தேகத்தின் பேரில் ஸ்கேன் செய்யப்பட்டன. அதில், தங்கம் மற்றும் வரி செலுத்த வேண்டிய பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ரூ.13,85,746 மதிப்புள்ள 150 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த ஜூலை 2ஆம் தேதி, துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவரை விமான நிலைய சுங்கத்துறையின் புலனாய்வு பிரிவினர் சோதனை செய்தனர். அவரது உடமைகளை சந்தேகத்தின் பேரில் ஸ்கேன் செய்த போது அதில் தங்கம் மற்றும் வரி செலுத்த வேண்டிய பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தங்கத்தை விடுங்க.. குரங்கை கடத்தி இருக்காங்க!
இதையடுத்து, அந்தப் பயணியிடமிருந்து ரூ.13,58,031 மதிப்புள்ள 147 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல, தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து கடந்த ஜூலை 1ஆம் தேதி, சென்னை வந்த விமானத்தில் பயணி ஒருவரிடம் விசாரணை மேற்கொண்ட போது சாக்லெட்டுகள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் கீழ் இரண்டு செல்லப்பிராணி பைகளில் வித்தியாசமான இரண்டு குரங்குகளை மறைத்து கொண்டுவந்தது கண்டறியப்பட்டது.
நீண்ட கைகளை உடைய குரங்கு, சாம்பல் நிற குரங்கு ஆகியவை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டது, வனவிலங்குகள் (பாதுகாப்பு) சட்டம் 1972 மற்றும் சுங்கச்சட்டம் 1962 ஆகியவற்றின் கீழ் குற்றச் செயலாகும்.
இதையடுத்து அந்தக் குரங்குகள் கைப்பற்றப்பட்டு தாய்லாந்திற்கே திருப்பி அனுப்பப்பட்டது. கைது செய்யப்பட்ட அந்தப் பயணியை ஆலந்தூரில் உள்ள சுங்கத்துறையினருக்கான தனி நீதிமன்ற மாஜிஸ்திரேட் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.





















