Chandrayaan 3: நிலவை நெருங்கும் சந்திரயான் 3.. தொடங்கியது சுற்றுப்பாதை தூரத்தை குறைக்கும் பணிகள்..! அடுத்தது என்ன?
சந்திரயான் 3: நிலவின் சுற்றுப்பாதை தூரத்தை குறைக்கும் பணி இன்று முதல் தொடங்கும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரயான் 3 விண்கலம் கடந்த 14 ஆம் தேதி ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. அடுத்ததாக, 40 நாட்கள் பயணம் செய்து ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாலை 5.47 மணியளவில் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணில் செலுத்தப்பட்ட பின் இரண்டாம் கட்டமாக, விண்கலம் புவியின் தரைப்பரப்பில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்றதும், அதற்கு ஒரு உந்துதல் வழங்கப்பட்டு புவியின் நீளவட்டப்பாதையில் சுற்ற வைக்கப்பட்டது.
சந்திரயான் 3:
15 நாட்கள் ஒவ்வொரு 170 கிலோ மீட்டருக்கு உந்துதல் வழங்கப்படும். இதனை ஆர்பிட் ரைசிங் என அழைக்கப்படும். அதனை தொடர்ந்து, டிரான்ஸ் லூனார் ஆர்பிட் எனப்படும் நிலவு பாதையில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நுழைந்தது.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி சந்திரயான் 3 பூமியின் நீள்வட்டார சுற்றுப்பாதையில் இருந்து அதிகபட்ச உந்துதல் கொடுக்கப்பட்டு நிலவு பாதையில் நுழைந்தது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி மாலை சுமார் 5 மணி அளவில் சந்திரயான் 3 விண்கலம் நிலவு பாதையில் இருந்து நிலவின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது. அதாவது lunar orbit injection என்ற நிகழ்வு மூலம் விண்கலம் நிலவின் வட்டார சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது.
Hey earthlings! I'm in the lunar orbit. @isro, could you please allow me to post some pictures? So that I can make them feel jealous! pic.twitter.com/ly3ZGTook0
— LVM3-M4/CHANDRAYAAN-3 MISSION (@chandrayaan_3) August 8, 2023
சந்திரயான் 3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் அதிகபட்சமாக 18 ஆயிரம் கிலோமீட்டர் முதல் குறைந்தபட்சம் 100 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்யும். இன்று முதல் நிலவின் சுற்றுப்பாதை தூரத்தை குறைக்கும் பணி தொடங்கும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரையிறக்கம்:
100 கிமீ தூரத்தை எட்டியபின், விண்கலத்தில் புரபல்சன் மற்றும் விக்ரம் என்ற லேண்டர் என இரண்டு முக்கியப் பகுதிகள் உள்ளன. அந்த லேண்டரில்தான் ரோவர் கருவியும் அமைந்துள்ளது. தரையிறக்கத்தின் போது உந்துவிசை கருவியையும், லேண்டரையும் தனியாக பிரிக்க வேண்டியுள்ளது. அப்படிப் பிரித்து, லேண்டரை அதிகபட்சமாக 100 கிலோமீட்டர் முதல் குறைந்தபட்சமாக 30 கிலோமீட்டர் வரை நீள்வட்டப் பாதையில் செலுத்துவார்கள். லேண்டரின் கீழே நான்கு குட்டி ராக்கெட்டுகள் உள்ளன. அந்த ராக்கெட்டுகளின் உதவியுடன், லேண்டரை மெல்ல மெல்லத் தரையிறக்க வேண்டும். இது வெற்றிகரமாக நிகழ்ந்தால், சந்திரயான் 3 நிலவின் அதன் ஆராய்ச்சி தொடங்கி தரவுகளை வழங்கும்.