HBD Periyar: அறிவைத் தடுப்பாரை மண்ணோடு பெயர்த்த கடப்பாரை.. இன்று பெரியாருக்கு பிறந்தநாள்..
வட இந்தியாவில் இன்றளவும் கொண்டாடப்படும் சனாதன தர்மத்தை பெரியார் எதிர்ப்பதற்கு காரணம் என்ன? அதன் மீது அவர் வைக்கும் விமர்சனங்கள் என்ன? என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
அமைச்சர் உதயநிதியின் ஒற்றை வார்த்தை நாடு முழுவதும் பேசுபொருளாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி வரை எதிர்வினையாற்றியுள்ளார்கள். அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் வரை, அவரின் கருத்து தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சனாதன தர்மத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற உதயநிதியின் கருத்து இன்று நேற்று பேசப்படவில்லை.
சனாதன ஒழிப்பை தீவிரமாக பேசிய பெரியார்:
நூற்றாண்டு வரலாறு கொண்ட சுயமரியாதை இயக்கத்தின் முதன்முதற் கொள்கையே சனாதன ஒழிப்புதான். பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த ஒன்று. சனாதன தர்ம ஒழிப்பு பற்றி பேசியதற்கு வட இந்தியாவில் பெரும் எதிர்ப்பு எழுந்த போதிலும் தமிழ்நாட்டில் பெரிய எதிர்வினை ஏழாததற்கு காரணம் பெரியார்தான்.
சனாதன ஒழிப்பு பற்றி இன்று பேசப்படும் கருத்துக்கே இவ்வளவு எதிர்ப்பு இருக்குமானால், நூற்றாண்டுகளுக்கு முன்பு அறிவியல், பகுத்தறிவு விழிப்புணர்வு இல்லாத காலத்தில் எவ்வளவு எதிர்ப்பு இருந்திருக்கும்.
படிப்பறிவு இல்லாத பாமர மக்களிடம், அப்படிப்பட்ட சூழலில், சனாதன எதிர்ப்பை பெரியார், அம்பேத்கர் போன்றோர் எப்படி கொண்டு சேர்த்தார்கள் என்பது மிகப் பெரிய கேள்வியே. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பெரியாரிய கொள்கைகளை அடிப்படையாக கொண்ட திராவிட இயக்கங்கள்தான் கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்து வருகின்றன.
வட இந்தியாவில் இன்றளவும் கொண்டாடப்படும் சனாதன தர்மத்தை பெரியார் எதிர்ப்பதற்கு காரணம் என்ன? அதன் மீது அவர் வைக்கும் விமர்சனங்கள் என்ன? அம்பேத்கர் பிறந்த மகாராஷ்டிராவை காட்டிலும் பெரியாரின் தமிழ்நாட்டில் இன்றளவும் சனாதன ஒழிப்பு உயிர்ப்புடன் இருப்பதற்கு காரணம் என்ன? என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
சனாதனம் என்றால் என்ன?
சனாதனம் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு நித்தியம் என்பது பொருள். அதாவது, மாறாத தன்மை கொண்டது என்பது பொருள். இந்து மதத்தின் சாராம்சமே சனாதனம் என இந்துக்கள் நம்புகின்றனர். பலதரப்பட்ட கலாசாரம், பல்வேறு சமயம், தத்துவங்கள், பாரம்பரியம் ஆகியவற்றை ஒருங்கிணைத்தே இந்து மதம் உருவாக்கப்பட்டது. சனாதன தர்மத்திற்கு மாற்றாக இந்து என்ற வார்த்தையும் இந்துவுக்கு மாற்றாக சனாதன தர்மம் என்ற வார்த்தையும் மாறி மாறி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
மாற்றம் என்பதே நிலையான ஒன்று. மாறாவே முடியாது என உலகில் எதுவும் இல்லை. அனைத்தையும் கேள்விக்கு உட்படுத்த வேண்டும் என்பதே அறிவியல். இப்படிப்பட்ட சனாதன தர்மத்தைதான் சமூக சீர்திருத்தவாதிகள் தொடர்ந்து எதிர்த்து வந்தனர்.
சனாதனம் மீதான பெரியாரின் விமர்சனம்:
இந்து மதத்தின் அடிப்படையான சாதியம், பாகுபாடு கற்பிக்கும் விதமாக உள்ளது என்றும் அடக்குமுறைகளை சமூக கட்டமைப்பின் ஒரு அங்கமாக மாற்றுகிறது என்றும் பெரியார் விமர்சித்தார். அநீதி மற்றும் சமத்துவமின்மையின் ஆதாரமாக இருக்கும் சாதியத்தை போதிக்கும் சனாதன தர்மத்தை தீவிரமாக எதிர்த்தார். சமூக படிநிலையில் கீழ் இருக்கும் சாதிகளை சுரண்டுவதற்கு சனாதன தர்மம் என்ற கோட்பாட்டை பிராமணர்கள் பயன்படுத்துவதாகவும் பெரியார் குற்றஞ்சாட்டினார்.
சாதிய கட்டமைப்பை நியாயப்படுத்தவும் சமூக படிநிலையில் கீழ் உள்ள சாதி மக்களை அடிமைகளாக வைத்திருக்கவே கர்மா, மறுபிறவி, வர்ணம், தர்மம், மோட்சம் ஆகிய கோட்பாடுகள் நிலைநிறுத்தப்படுவதாகவும் பெரியார் வாதிட்டார். இதன் காரணமாகவே, வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், மனுஸ்மிருதி போன்றவற்றை பெரியார் கடுமையாக எதிர்த்தார். பாகுபாட்டை போதிக்கும் நோக்கில் மனிதர்களே இவை அனைத்தையும் எழுதியதாகக் கூறினார்.
இந்து மதத்தின் அங்கமாக கருதப்படும் புராணங்கள், மூடநம்பிக்கைகள் மற்றும் சடங்குகளுக்கு எதிராக கேள்வி எழுப்பிய அவர், அறிவியல் மனப்பான்மை, பகுத்தறியும் தன்மை, விமர்சன சிந்தனை ஆகியவற்றுக்கு ஆதரவாக மக்கள் மத்தியில் பேசினார்.
பெரியாரின் சனாதன எதிர்ப்பு அறிவுசார்ந்து மட்டும் இயங்கவில்லை. அரசியல் ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் எதிர்த்தார். கல்வி, அரசு நிர்வாகம், ஊடகம், இலக்கியம், கலை, மொழி என அனைத்திலும் பிராமன ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்த அவர், அனைவருக்கும் சமமான உரிமைகளும் வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த நோக்கத்திற்காக சமூக நிலையில் கீழ் இருக்கும் சாதிகளுக்கு இட ஒதுக்கீடு, பிரதிநிதித்துவம், கல்வி மற்றும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். சாதிய பாகுபாடு, தீண்டாமை, குழந்தை திருமணம், வரதட்சணை முறை, கைம்பெண் திருமணம், பலதார மணம், மூடநம்பிக்கை உள்ளிட்டவை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பாலின சமத்துவம், பெண் கல்வி, சாதி மறுப்பு திருமணம், குடும்பக் கட்டுப்பாடு ஆகியவற்றை ஆதரித்து பேசினார்.
அரசியல் ரீதியாக ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் பாசிச எதிர்ப்பை முழங்கி வந்தார். தமிழ்நாட்டில் திராவிட கொள்கைக்கு அடித்தளமிட்டு பிராமணத்திற்கு எதிராக தமிழ் அடையாளத்தை முன்னிறுத்தினார். வட நாட்டின் ஆதிக்கத்தை எதிர்த்து திராவிட நாடு கோரிக்கை முன்வைத்தார். பெரியாருக்கு பின் வந்த அவரின் அரசியல் வாரிசுகள், அவரின் கொள்கைகளை வாக்கரசியலுக்கு ஏற்ற வகையில் திருத்தம் மேற்கொண்டாலும் அரசியல் அளவில் தொடர்ந்து இயங்கி வருவதே சனாதன ஒழிப்பு இன்றளவும் உயிர்ப்புடன் காரணம்.