ஹிட்லரைப் போல் கேஸ் சேம்பர் மட்டும் தான் அமைக்கவில்லை: மத்திய அரசை சாடிய சிவ சேனா
எதிர்க்கட்சிகளை அடக்குவது ஒடுக்குவதில் மத்திய அரசு எல்லை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. அடக்குமுறைகளை ஏவுவதில் மத்திய அரசு இன்னும் ஹிட்லரைப் போல் விஷவாயு கக்கும் கேஸ் சேம்பர் மட்டும் தான் அமைக்கவில்லை என்று விமர்சித்துள்ளது சிவ சேனா கட்சி.
எதிர்க்கட்சிகளை அடக்குவது ஒடுக்குவதில் மத்திய அரசு எல்லை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. அடக்குமுறைகளை ஏவுவதில் மத்திய அரசு இன்னும் ஹிட்லரைப் போல் விஷவாயு கக்கும் கேஸ் சேம்பர் மட்டும் தான் அமைக்கவில்லை என்று விமர்சித்துள்ளது சிவ சேனா கட்சி.
மகாராஷ்டிராவில் சிவ சேனா கட்சி ஆட்சியில் உள்ளது. முதல்வராக உத்தவ் தாக்கரேவும் துணை முதல்வராக கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாரும் உள்ளனர். மத்தியில் உள்ள பாஜக ஆட்சியையும், பிரதமர் நரேந்திர மோடியையும் விமர்சிப்பதில் சிவ சேனா தவறுவதே இல்லை. அதன் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் அன்றாடம் ஏதாவது விமர்சனங்கள் வருவது வழக்கம். அப்படி இன்று சிவ சேனாவின் சாம்னா நாளிதழிலில் வெளியான தலையங்கத்தில் பாஜக ஆட்சியை ஹிட்லர் ஆட்சிக்கு ஒப்பிட்டு விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.
அந்தத் தலையங்கத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை அமலாக்கத் துறை விசாரிக்கிறது. இதன் மூலம் மத்திய அரசு நினைத்தால் யார் காலரை வேண்டுமானாலும் பிடித்து இழுக்கும் என்று நிரூபித்துள்ளது பாஜக. ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தியை மட்டுமே இதுவரை விமர்சித்து வந்தனர். இப்போது ஒட்டுமொத்த காந்தி குடும்பத்தின் நற்பெயரையும் ஒழிக்க வேண்டும் என்று செயல்படுகின்றனர். சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நடந்துள்ளது இனி யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். எதிரிகளை அழிப்பதற்கு ஹிட்லரைப் போல் விஷவாயு கக்கும் கேஸ் சேம்பர் மட்டுமே அமைக்கவில்லை. சிவ சேனா, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி, ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சி, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சி என யாரை வேண்டுமானாலும் சிபிஐ, அமலாக்கத் துறை விசாரிக்கும் ஆனால், பாஜகவினர் யாராவது ஒருவராவது இத்தகைய விசாரணை அமைப்புகளின் வளையத்திற்குள் வந்திருக்கின்றனரா? இல்லையே! அமலாக்கத் துறைக்கு தெரிந்தது எல்லாம், முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக், மாநில அமைச்சர் நவாப் மாலிக். திரிணமூல் கட்சியின் அபிஷேக் பானர்ஜி, சிவ சேனாவில் சஞ்சய் ரவுத், அனில் பரப், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் லாலு பிரசாத் ஆகியோரைத் தான் தெரியும். அப்புறம் எப்படி சட்டம் எல்லோருக்கும் இந்த நாட்டில் சமமானதாக இருக்கும்.
இவ்வாறு சாம்னா பத்திரிகை தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் கடந்த 2010ஆம் ஆண்டு கைப்பற்றியது. நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை, யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் சோனியா காந்தி ஆஜராகவில்லை. ராகுல் காந்தி மூன்று நாட்கள் ஆஜராகிவிட்டு அடுத்த சம்மனை 20 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கக் கோரியுள்ளார்.