(Source: ECI/ABP News/ABP Majha)
Caste Census: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு.. திடீரென உச்ச நீதிமன்றத்தில் ஜகா வாங்கிய மத்திய அரசு
மத்திய அரசின் இந்த வாதம் மூலம் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தடுத்து நிறுத்த பாஜக முயற்சிப்பது அம்பலப்பட்டுள்ளதாக பிகாரை ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் கடுமையாக சாடின.
பிகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த நிதிஷ் குமார் தலைமையிலான அரசு முடிவெடுத்து, இரண்டு கட்டங்களாக அதற்கான பணிகளை மேற்கொண்டது.
கடந்த ஜனவரி மாதம், முதல் கட்ட பணி நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கிய இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு பணி, மே 15ஆம் தேதி வரை நடைபெறவிருந்தது. இச்சூழலில், சாதி வாரி கணக்கெடுப்பை நிறுத்தி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சில சமூக அமைப்புகள் சார்பாகவும் தனிநபர்கள் சார்பாகவும் வழக்கு தொடரப்பட்டது.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு:
இந்த விவகாரத்தில் தலையிட மறுத்த உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தை அணுகும்படி கேட்டு கொண்டது. அதேபோல, இந்த வழக்கை விரைந்து விசாரிக்க உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதிதாலும், பின்னர், அதற்கு அனுமதி வழங்கியது.
இதற்கிடையே, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி முடிக்கப்பட்டு, இது தொடர்பான தரவுகள் மாநில அரசின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 7 நாள்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து, நேற்று மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், "மத்திய அரசை தவிர வேறு எந்த அமைப்பாலும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முடியாது" என தெரிவித்திருந்தது.
திடீரென உச்ச நீதிமன்றத்தில் ஜகா வாங்கிய மத்திய பாஜக அரசு:
மத்திய அரசின் இந்த வாதம் மூலம் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தடுத்து நிறுத்த பாஜக முயற்சிப்பது அம்பலப்பட்டுள்ளதாக பிகாரை ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் கடுமையாக சாடின.
இந்த நிலையில், புதிய பதில் மனு ஒன்றை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. அதில், "மத்திய அரசை தவிர வேறு எந்த அமைப்பாலும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முடியாது" என தெரிவிக்கப்பட்ட கருத்து நீக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த கருத்து கவனக்குறைவாக சேர்க்கப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
முதலில் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, பின்னர் அதிலிருந்து மத்திய அரசு பின்வாங்கியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதை கடுமையாக விமர்சித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள எம்.பி. மனோஜ் குமார் ஜா, "சாதிவாரி கணக்கெடுப்பை தடுக்க பிரதமர் அலுவலகம் அனைத்து விதமான தந்திரத்தையும் முயற்சித்து வருகிறது.
பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகளுக்கு மக்கள் தொகையில் பெரும் பகுதியினரின் உரிமைகளைப் பறிப்பது மிக முக்கியமானது என்பதை இது நிரூபிக்கிறது. இது கவனக்குறைவாக நடக்கவில்லை. இது வேண்டுமென்றே செய்யப்பட்டது. மத்திய அரசை எச்சரிக்கிறேன். இந்தப் பெரும் பகுதியினரின் உரிமைகளைத் தடுக்க நேரடியாகவோ மறைமுகமாகவோ முயற்சித்தால் நீங்கள் ஒரு எரிமலையை சந்திப்பீர்கள்" என தெரிவித்துள்ளார்.