Satyapal Malik: பாஜக, பிரதமர் மோடியை விமர்சிக்கும் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் - ஊழல் வழக்கில் 30 இடங்களில் சிபிஐ சோதனை
Satyapal Malik: பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த முன்னாள் ஆளுநர், சத்யபால் மாலிக் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது.
Satyapal Malik: கிரு நீர்மின் திட்டம் தொடர்பான வழக்கில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் தொடர்புடைய பல இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.
சத்யபால் மாலிக் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை:
ஜம்மு & காஷ்மீர் நீர்மின் திட்ட ஒப்பந்தம் வழங்கியதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் விசாரணையின் ஒரு பகுதியாக, அந்த யூனியன் பிரதேசத்தின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கின் வளாகம் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில், சத்யபால் மாலிக் மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர்கள் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை அரங்கேறியுள்ளது. பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த சத்யபால் மாலிக் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது அரசியல் கவனம் பெற்றுள்ளது.
வழக்கு விவரம்:
2019 ஆம் ஆண்டில் கிரு ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் திட்டத்தின் (HEP) குடிமராமத்து பணிகளின் சுமார் 2,200 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 23, 2018 முதல் அக்டோபர் 30, 2019 வரை ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், கிரு நீர் மின் திட்டம் உள்ளிட்ட இரண்டு திட்டங்கள் தொடர்பான கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க ரூ.300 கோடி லஞ்சம் சிலர் முற்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இதனால், அவர் லஞ்சம் பெற்று இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சத்யபால் மாலிக் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது.
பாஜகவை விமர்சிக்கும் சத்யபால் மாலிக்:
78 வயதான சத்யபால் மாலிக் இளம் வயது முதலே அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளார். மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2012ம் ஆண்டு பாஜக தேசிய துணை தலைவரகாவும் பதவி வகித்துள்ளார். தொடர்ந்து, பீகார், ஒடிசா, ஜம்மு & காஷ்மீர், கோவா மற்றும் மேகாலயா ஆகியா மாநிலங்களில் ஆளுநராக பொறுப்பு வகித்துள்ளார். இந்நிலையில், ஆளுநர் பதவியில் இருந்து வெளியேறியதில் இருந்தே, சத்யபால் மாலிக் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். அண்மையில் பேட்டி ஒன்றில் பேசுகையில், 40 ராணுவ வீரர்கள் பலியான புல்வாமா தாக்குதலுக்கு உள்துறை அமைச்சகத்தின் அலட்சியமே காரணம் எனவும், அதுகுறித்து பேச வேண்டாம் என தனக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும், ராணுவ வீரர்களின் உயிர் தியாகம் அரசியல் லாபத்திற்கு பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். தேபோன்று, பல்வேறு குற்றச்சாட்டுகளையும் பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக முன்வைத்து வருகிறார். இந்நிலையில், சத்யபால் மாலிக் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது.