Cabinet committee on security: ரூ.10,200 கோடியை கொட்டும் மத்திய அரசு, கலங்கும் எதிரி நாடுகள் - பினாகா ராக்கெட் பற்றி தெரியுமா?
Cabinet committee on security: பினாகா ராக்கெட் வெடிமருந்துகளுக்காக, ரூ.10,200 கோடியை ஒதுக்க பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

Cabinet committee on security: ராணுவத்தின் செயல்திறனை மேம்படுத்தும் விதமாக, பினாகா ராக்கெட் வெடிமருந்து கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.10,200 கோடி மதிப்பிலான கொள்முதல்:
பீரங்கி நவீனமயமாக்கலுக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், பினாகா மல்டி-பேரல் ராக்கெட் லாஞ்சர் அமைப்புக்கான வெடிமருந்துகளுக்கான ரூ.10,200 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழுவால் இந்தத் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன் மூலம், ராணுவத்துக்கு இரண்டு வகையான வெடிமருந்துகள் வாங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் மார்ச் 31-ம் தேதி இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது. பினாகா ராக்கெட் லாஞ்சருக்கு வெடிமருந்து வாங்கும் இந்த ஒப்பந்தமானது, உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஆயுத அமைப்புகளுக்கான மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.
வெடிமருந்துகளின் விவரம்:
பினாகா ராக்கெட் லாஞ்சர் வெடிமருந்துடன், Area denial munitions (ADM) எனப்படும் பகுதி மறுப்பு வெடிமருந்தையும் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ADM எனப்படுவது ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் எதிரி நாட்டு படைகள் சுதந்திரமாக இயங்குவதை கட்டுப்படுத்த பயன்படும் ஆயுதங்கள் ஆகும். அவை ராக்கெட்டுகள், பீரங்கி எறிகணைகள் அல்லது கண்ணிவெடிகளாக இருக்கலாம். இந்த கொள்முதல் திட்டத்திற்கான ஒப்பந்தம் நாக்பூரின் ராக்கெட் உற்பத்தியாளரான சோலார் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் முன்னாள் ஆர்ட்னன்ஸ் ஃபேக்டரி வாரிய நிறுவனமான மியூனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் (எம்ஐஎல்) ஆகியவற்றுக்கு இடையே பிரிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 45 கிமீ தூர இலக்குகளை தாகக்க் கூடிய ராக்கெட்டுகளுக்கான வெடிமருந்துகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால், சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் 45 கிமீ தூரத்திற்கு பாதுகாப்பு வலுப்படும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேம்படுத்தலில் பினாகா ராக்கெட் லாஞ்சர்:
ராணுவத் தளபதி உபேந்திர திவேதி கடந்த 13ம் தேதி நடத்திய செய்தியாளர் சந்திப்பில், உயர் வெடிகுண்டு வெடிமருந்துகளுக்கான ரூ.5,700 கோடி மற்றும் ரூ.4,500 கோடி பகுதி மறுப்பு வெடிமருந்துகள் உள்ளிட்ட பினாகா ஆயுத அமைப்புகளின் வெடிமருந்துகளுக்கான ஒப்பந்தம் அரசாங்கத்தால் விரைவில் அனுமதிக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், புதிய கொள்முதல் ஒப்பந்தத்திற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. டிஆர்டிஓ ஏற்கனவே பினாகா ராக்கெட்டுகளின் 120 கிமீ இலக்கை தாக்கும் எடிஷனை உருவாக்கும் பணியின் மேம்பட்ட கட்டத்தில் உள்ளது.அடுத்த நிதியாண்டில் அதன் முதல் சோதனை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பினாகா மல்டி - பேரல் ராக்கெட் லாஞ்சர்:
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 1999ம் ஆண்டு கார்கில் போரில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்கா மல்டி பேரல் ராக்கெட் லாஞ்சர், தற்போது வரை ராணுவத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது. இது 75 கிமீ வரை நீட்டிக்கப்பட்ட வரம்பைக் கொண்டுள்ளது, அதை மேலும் 120 கிமீ ஆகவும் இறுதியில் 300 கிமீ ஆகவும் அதிகரிக்க டிஆர்டிஒ திட்டமிட்டுள்ளது. இந்த நீட்டிக்கப்பட்ட வரம்பு முற்றிலும் பினாகா மீது கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது மாற்று நீண்ட தூர ஆயுத அமைப்புகளை படிப்படியாக அகற்றும் என கூறப்படுகிறது. ஏற்றுமதியிலும் பினாகா கவனம் ஈர்த்துள்ளது. அர்மீனியா கொள்முதல் செய்துள்ள நிலையில், ஃப்ரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளும், பினாகா மல்டி பேரல் ராக்கெட் லாஞ்சரை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

