Nursing : 27 மாநிலங்களில் 157 நர்சிங் கல்லூரிகள்.. சுகாதார ஏற்றத்தாழ்வை போக்க அதிரடி திட்டம்..மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!
இதற்கான ஒப்புதலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு நேற்று வழங்கியது.
![Nursing : 27 மாநிலங்களில் 157 நர்சிங் கல்லூரிகள்.. சுகாதார ஏற்றத்தாழ்வை போக்க அதிரடி திட்டம்..மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! Cabinet approves establishment of 157 new nursing colleges know more details Nursing : 27 மாநிலங்களில் 157 நர்சிங் கல்லூரிகள்.. சுகாதார ஏற்றத்தாழ்வை போக்க அதிரடி திட்டம்..மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/27/b31ebf983bdef597578fc5448e7cef981682598745488224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அடுத்த இரண்டு ஆண்டுகளில், இந்தியாவில் உள்ள 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 2014ஆம் ஆண்டுக்கு பிறகு கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரி வளாகங்களில் 157 அரசு நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளது. 1,570 கோடி ரூபாய் செலவில் இந்த நர்சிங் கல்லூரிகள் கட்டப்பட உள்ளது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15,700 நர்சிங் பட்டதாரிகள் கிடைக்க உள்ளனர்.
அமைச்சரவைக் குழு ஒப்புதல்:
இதற்கான ஒப்புதலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு நேற்று வழங்கியது. அமைச்சரவையின் இந்த முடிவால், சுகாதாரத் துறையில் புவியியல் மற்றும் கிராமப்புற-நகர்ப்புற ஏற்றத்தாழ்வுகள் போக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டார். இந்த திட்டத்தை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், ஒவ்வொரு கட்டிடத்திற்கான திட்டமிடலையும் செயல்பாட்டிற்கான விரிவான காலக்கெடுவும் வகுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "இத்திட்டத்தின் கீழ் புதிய செவிலியர் கல்லூரிகளை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்திடம் மாநில அரசு/யூனியன் பிரதேச அரசுகள் தகவல் தெரிவிக்கும்" என்றார்.
செவிலியர் கல்வியை உலக தரத்திற்கு இணையாக மாற்றுவது முக்கியம்:
புதிய நர்சிங் கல்லூரிகள் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள மத்திய அரசு, "கடந்த சில ஆண்டுகளில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அதைத் தொடர்ந்து எம்பிபிஎஸ் இடங்களை உயர்த்தியுள்ளது. 2014க்கு முன் 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகள் தற்போது 660 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 2013-14ல் இருந்து MBBS இடங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காகவும், முதுகலை இடங்கள் இரு மடங்கிற்கும் அதிகமாகவும் அதிகரித்துள்ளது. இந்திய செவிலியர்களின் சேவைகள் வெளிநாடுகளில் கணிசமான அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. எனவே, அவர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதை எளிதாக்கும் வகையில் இந்திய செவிலியர் கல்வியை உலகளாவிய தரத்திற்கு இணையாக கொண்டு வருவது முக்கியம்.
இந்திய செவிலியர்கள் மிகவும் திறமையான நிபுணர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். சுகாதார விநியோக அமைப்பை அவர்களே இயக்குகிறார்கள். ஆனால், அவர்களின் எண்ணிக்கை உலகளாவில் குறைவாக உள்ளது. போதுமான அளவு மேம்படுத்தப்பட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளது.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேல், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை அலற வைத்த கொரோனா, சுகாதார அமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போதுமான மருத்துவ வசதி இல்லாததால் மக்கள் பெரும் அவதியை சந்தித்தனர்.
இச்சூழலில், நாடு முழுவதும் 27 மாநிலங்களில் 157 நர்சிங் கல்லூரிகள் கட்டப்படும் என வெளியாகியுள்ள அறிவிப்பு சுகாதாரத்துறையை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)