FM Nirmala Sitharaman: புதிய பட்ஜெட் இப்படித்தான் இருக்கும்... நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
முந்தைய பட்ஜெட்களின் தொடர்ச்சியாகவே அடுத்த நிதியாண்டிற்கான, பட்ஜெட் அமையும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் 95-வது ஆண்டு மாநாடு மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டம் டெல்லியில் தொடங்கியது.
புதிய பட்ஜெட் எப்படி இருக்கும்?
நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் தொழில்துறை வளர்ச்சி குறித்து குறிப்பிட்டார். அப்போது 2023 - 24 நிதியாண்டிற்கான பட்ஜெட் குறித்தும் பேசினார். அதன்படி, அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டை உருவாக்கும் நேரத்தில் இந்த விழாவில் பங்கேற்பது தனக்கு மிகுந்த ஊக்கமளிக்கிறது. மத்திய அரசின் புதிய பட்ஜெட்டானது முந்தைய பட்ஜெட்டுகளின் ஆன்மாவை பின்பற்றியே இருக்கும். முந்தைய திட்டங்களை அடிப்படையில் புதிய டெம்பிளேட்டை அமைக்கப்படும், அதேநேரம் அது அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாவை முன்னெடுத்துச் செல்வதாக இருக்கும். 2047-ம் ஆண்டில், மிகவும் வளர்ச்சியடைந்த இந்தியாவில் நமது எதிர்கால சந்ததியினர் வாழ வேண்டும் என விரும்புவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, கடந்த நிதியாண்டில் ரூ.5.5 லட்சம் கோடியாக இருந்த இருந்த மூலதனச் செலவை, 35.4 சதவிகிதம் உயர்த்தி ரூ.7.5 லட்சம் கோடியாக நிர்ணயித்து நிர்மலா சீதாராமன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Smt @nsitharaman delivers the Keynote Address at the 95th @ficci_india's Annual Convention and Annual General Meeting (AGM) in New Delhi. The theme of the convention is 'India@100: Amrit Kaal, Sustainable & Inclusive.' #FICCIAGM #IndiaAt100. pic.twitter.com/x7qgOsTsh3
— NSitharamanOffice (@nsitharamanoffc) December 16, 2022
உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்:
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அவர், உற்பத்தி துறை மீது இந்தியா கவனம் செலுத்துவதை விடுத்து அதற்கு பதிலாக சேவைத்துறையில் அக்கறை செலுத்த வேண்டும் என்று நமக்கு யோசனை சொல்லப்படுகிறது. ஆனால், சேவை துறையில் புதிய வாய்ப்புகளை ஆராய்வதுடன், உற்பத்தி துறையை மேலும் வலுப்படுத்துவது அவசியம். அதற்கு சாதகமாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த கண்டுபிடிப்புகளை தொழில்துறையினர் உன்னிப்பாக தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் புதிய ஆற்றலில் இருந்து தொழில்துறை பலன் அடையலாம். நீண்டகாலமாக நிகழ்ந்து வரும் பொருளாதார மந்தநிலை, மேலைநாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் உங்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்ட போதிலும், வேறு நாடுகளுக்கு இடம்பெயர நினைகும் முதலீடுகள், இந்தியாவை தேடி வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. அந்த முதலீட்டாளர்களை இந்தியாவை நோக்கி ஈர்க்க தொழில்துறையினர் வியூகம் வகுக்க வேண்டும். உலகம் தூய்மையான எரிசக்தியை நோக்கி இடம்பெயர்ந்து வருவதால், வளர்ந்த நாடுகள் உங்கள் மீது அதிக வரி விதிக்கக்கூடும். ஜி20 மாநாட்டின்போது, இந்தியாவின் சாதனைகள் விளம்பரப்படுத்தப்படும். இந்தியாவில், 14 கோடி நடுத்தர வருவாய் குடும்பங்களும், 1 கோடியே 40 லட்சம் உயர் வருவாய் குடும்பங்களும் அதிகரிக்கும். இதனால், பொருட்களின் தேவை அதிகரிக்கும், அதற்கேற்ப உள்நாட்டு உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும் என, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து 5வது முறையாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய பட்ஜெட்டை தயாரிப்பதற்காக, பல்வேறு பிரிவுகளை சார்ந்த துறைசார் வல்லுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.