RK Shanmugham Chetty: இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழன்..! யார் இந்த சண்முகம்..?
சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த பெருமை தமிழ்நாட்டைச் சேர்ந்த சண்முகத்திற்கே சேரும். அவர் கோவையில் பிறந்து வளர்ந்தவர்.
இந்தியாவின் 2023-2024ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். நாட்டின் நிதிநிலை அறிக்கையை பிரதமர் இந்திராகாந்திக்கு பிறகு தாக்கல் செய்த 2வது பெண் நிதியமைச்சர் என்ற பெருமையும் நிர்மலா சீதாராமனுக்கு சேரும். இவையனைத்தும் நாம் அறிந்தவையே. ஆனால், சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் யார் தெரியமா..? அவர் ஒரு தமிழர்.
யார் இந்த சண்முகம்:
ஆச்சரியமாக இருக்கிறதா? சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய அரசாங்கத்தின் முதல் நிதியமைச்சராக பதவி வகித்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சண்முகம். கோவையில் ஆர்.கந்தசாமி – ஸ்ரீரங்கம்மாள் தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்தவர்தான் சண்முகம். இவருக்கு மூன்று தம்பிகளும், இரண்டு தங்கைகளும் உள்ளனர்.
1892ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி பிறந்த சண்முகத்திற்கு சிறுவயது முதலே படிப்பில் ஆர்வம் அதிகம். மிகச்செழிப்பான குடும்பத்தில் பிறந்த சண்முகம் தனது பள்ளிப்படிப்பை கோவை யூனியன் உயர்நிலைப் பள்ளியில் முடித்த பிறகு சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் பட்டப்படிப்பையும், சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்தவர்.
முதல் நிதியமைச்சர்:
சட்டப்படிப்பை முடித்த பிறகு சில காலம் மட்டுமே வழக்கறிஞராக பணியாற்றிய சண்முகம் பின்னர் பொதுவாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கோவை நகரத்தின் மன்ற உறுப்பினராகவும், நகர்மன்ற துணைத்தலைவராகவும் பொறுப்பு வகித்த சண்முகம் சென்னை ராஜதானியின் சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். சுதந்திர இந்தியாவிற்கு முந்தைய நாடாளுமன்ற உறுப்பினராகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
1931ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரை கொச்சி அரசின் திவானாக பணிபுரிந்துள்ளார். 1938ம் ஆண்டு ஜெனிவாவில் நடைபெற்ற உலகநாடுகள் சங்க கூட்டத்திற்கு இந்தியாவின் சார்பில் பிரதிநிதியாக சென்றிருந்தார். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவின் முதல் நிதியமைச்சராக சண்முகம் பொறுப்பேற்றார். அவரை நிதியமைச்சராக நியமிக்க வேண்டுமென்று அப்போதைய பிரதமர் நேருவிடம் காந்தியே கேட்டுக்கொண்டது இவரது சிறப்பை காட்டுகிறது.
பெருமை சேர்த்த தமிழர்:
நாடாளுமன்றத்தில் சபாநாயகராக பொறுப்பு வகித்த முதல் தமிழர் என்ற பெருமையும் சண்முகத்திற்கே சேரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவிடம் சிக்கியிருந்த இந்தியாவின் நூறு கோடி ரூபாய் அந்நிய செலவாணியையும், தங்க இருப்பையும் வாதத்திறமையால் மீட்டெடுத்த பெருமையும் இவருக்கு உண்டு.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக நேருவும், செயலாளராக சித்தரஞ்சன் தாசும் செயல்பட்டபோது, அக்கட்சியின் கொறடாவாக பொறுப்பு வகித்த பெருமையும் சண்முகத்திற்கு உண்டு. தமிழ் இலக்கியத்திற்காகவும் பல தொண்டுகளை ஆற்றியுள்ளார். இவர் 1953ம் ஆண்டு மே மாதம் 5-ந் தேதி தனது 60வது வயதில் இயற்கை எய்தினார். சுதந்திரம் பெற்றது முதல் பல்வேறு தடைகளை கடந்து இன்று பல்வேறு வளர்ச்சிகளை அடைந்துள்ள இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது ஒரு தமிழர் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு பெருமையான விஷயமே ஆகும்.
மேலும் படிக்க: Stock Market Spike : பட்ஜெட் நாளில் அமோகம்....ஏறுமுகத்தில் இந்திய பங்குச்சந்தை...1,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்...