BJP MP: கீழ்த்தரமான வார்த்தைகளை சொல்லி திட்டிய பா.ஜ.க. எம்பி.. மனம் நொந்த பகுஜன் சமாஜ் எம்பி
நாடாளுமன்ற விவாதத்தின்போது, பகுஜன் சமாஜ் கட்சி எம்பி டேனிஷ் அலியை நோக்கி பாஜக எம்பி ரமேஷ் பிதுரி, கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினார்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின்போது சந்திரயான் 3 வெற்றி குறித்த விவாதம் மக்களவையில் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, பகுஜன் சமாஜ் கட்சி எம்பி டேனிஷ் அலியை நோக்கி பாஜக எம்பி ரமேஷ் பிதுரி, கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினார். தீவிரவாதி என குறிப்பிட்டு பேசினார்.
நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி அதிர்ச்சி செயல்:
ரமேஷ் பிதுரி அருகில் அமர்ந்து, இதை கேட்டு கொண்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் சிரித்தார். இது, எதிர்க்கட்சி எம்பிக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சர்ச்சையான கருத்துகளை தெரிவித்த பாஜக எம்பிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ரமேஷ் பிதூரிக்கு எச்சரிக்கை விடுத்த சபாநாயகர், "இத்தகைய நடத்தை தொடர்ந்தால் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இந்த நிலையில், மோசமான வார்த்தைகளை சொல்லி பாஜக எம்பி தன்னை திட்டியது குறித்து மனம் நொந்து பேசிய டேனிஷ் அலி, "ரமேஷ் பிதுரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறுவது குறித்து பரிசீலிப்பேன்" என கூறியுள்ளார்.
மனம் நொந்து போன பகுஜன் சமாஜ் எம்பி:
உணர்ச்சிவசப்பட்டு பேசிய டேனிஷ் அலி, "ஒரு எம்பியான எனக்கே இப்படி நடந்தால், சாதாரண மக்களுக்கு என்ன நடக்கும்? இரவு முழுவதும் தூங்கமுடியவில்லை. தலையே வெடித்துவிடுவது போல இருந்தது. மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களை அவர்களின் சமூகத்துடன் இணைத்து தாக்குவதற்காகவா இந்த சிறப்பு அமர்வு கூட்டப்பட்டது?
இது ஒட்டுமொத்த நாட்டையும் அவமானப்படுத்தியுள்ளது. அவர் மீது அவரது கட்சி நடவடிக்கை எடுக்குமா அல்லது பதவி உயர்வு அளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இது வெறுப்பு பேச்சு. பிதுரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மக்களவை சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளேன்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி ஒருவருக்கு எதிராக இந்த அநாகரீகமான வார்த்தை பிரயோகிக்கப்படுவது இதுவே முதல் முறை. மிரட்டலை விடுத்திருக்கிறார்" என்றார்.
மக்களவை சபாநாயகருக்கு டேனிஷ் அலி எழுதியுள்ள கடிதத்தில், "இது மிகவும் துரதிஷ்டவசமானது. சபாநாயகராகிய உங்களது தலைமையின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இது நடந்துள்ளது என்பது இந்த மாபெரும் தேசத்தின் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த உறுப்பினராகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள எனக்கு உண்மையிலேயே மனவேதனை அளிக்கிறது. இவ்விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "இது முற்றிலும் வெட்கக்கேடான விஷயம். அரை மனதோடு ராஜ்நாத் சிங் மன்னிப்பு கோரியது ஏற்கத்தக்கது அல்ல. இது, நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். இடைநீக்கம் செய்வதற்கு சரியான வழக்கு. பிதூரியின் கருத்து ஒவ்வொரு இந்தியரையும் அவமதிக்கும் செயலாகும்" என்றார்.