Andhra Pradesh: ஆந்திராவில் தமிழக மாணவர்களை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்...! என்ன நடந்தது தெரியுமா..?
Andhra Pradesh: ஆந்திரா மாநிலத்தில் சுங்கச்சாவடி அருகே தமிழக சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது, சுங்கச்சாவடி ஊழியர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Andhra Pradesh: ஆந்திரா மாநிலத்தில் சுங்கச்சாவடி அருகே தமிழக சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது, சுங்கச்சாவடி ஊழியர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மாணவர்கள் மீது தாக்குதல்
திருப்பதியில் தனியார் சட்டக்கல்லூரியில் படித்துவரும் தமிழக மாணவர்கள் சிலர் தேர்வு எழுதிவிட்டு காரில் ஊருக்குத் திரும்பியிருக்கின்றனர். அப்போது வடமாலப்பேட்டை சுங்கச்சாவடியில் சுங்கக்கட்டணம் செலுத்தும்போது, சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், தமிழக மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் இருதரப்பினருக்குமிடையே தாக்குதலாக மாறியது. இதில் தமிழக மாணவர்கள் மீது சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சில மாணவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரா போலீசாரின் முன்னிலையில் இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அரசியல் தலைவர்கள் கண்டனம்
தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, எந்தத் தவறும் இழைக்காத அப்பாவிகளை தமிழர்கள் என்கிற ஒற்றைக் காரணத்துக்காகவே இனவெறி கொண்டு தாக்கிய ஆந்திராவைச் சேர்ந்த கொடுங்கோலர்களின் கோரத்தாக்குதல் கண்டனத்திற்குரியது என தெரிவித்தார். மேலும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது, சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டைகள், கம்பிகளை கொண்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது கடுமையாக தாக்கியதற்கு கண்டனம். இவர்களை கைது செய்து வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இரு மாநில பிரச்னையாக பெரிதுபடுத்த வேண்டாம்
இதுதொடர்பாக ஆந்திரா காவல்துறை நிருபர்களிடம் கூறியதாவது, "சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வாகன ஓட்டிகள் சிலரும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தனர் என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். ஆனால் அதற்குள் இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்னை என சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த சம்பவத்தை இரு மாநில பிரச்னையாக பெரிதுபடுத்த வேண்டாம். ஆந்திராவுக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே சுமுக உறவு நீடிக்கிறது” என கூறினார்.
மேலும் படிக்க : Laws Repealed: ”1,500 பழமையான சட்டங்கள் விரைவில் ரத்து” - மத்திய சட்டத்துறை அமைச்சர் தகவல்
மேலும் படிக்க : "சிறுமியை உயிருடன் விடும் அளவுக்கு குற்றவாளிக்கு கருணை.." - பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் சர்ச்சை கருத்து