(Source: ECI/ABP News/ABP Majha)
Shiv Sena Symbol: கடும் போட்டியில் ஷிண்டே - உத்தவ் தாக்கரே : சிவசேனா கட்சியின் வில் - அம்பு சின்னம் முடக்கம்..
அந்தேரி இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே இரு தரப்பு ஆதரவாளர்களும் வில் - அம்பு சின்னத்தை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சிவசேனா கட்சியின் வில் அம்பு சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது.
வில் - அம்பு சின்னத்தை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், அந்தேரி (கிழக்கு) தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில், உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே இரு தரப்பு ஆதரவாளர்களும் வில் - அம்பு சின்னத்தை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Shiv Sena's 'Bow & Arrow' symbol claim | Election Commission of India passes interim order, says in Andheri East bye polls neither of the two groups shall be permitted to use the symbol "Bow & Arrow", reserved for "Shivsena". pic.twitter.com/QtC9iNhZ0X
— ANI (@ANI) October 8, 2022
மேலும் இரண்டு தரப்பினருக்கும் வெவ்வேறு சின்னங்கள் ஒதுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 3ஆம் தேதி அந்தேரி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. சிவசேனா எம்எல்ஏ ரமேஷ் லட்கேவின் மறைவை தொடர்ந்து, இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவசேனா கட்சித் தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில், மகா விளாஸ் கூட்டணி முறிந்தது. தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஷிண்டே முதலமைச்சரானதைத் தொடர்ந்து, முதன்முறையாக மக்கள் மன்றத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை எதிர்கொள்கிறது.
ஆளும் பாஜகவும் (BJP) ஷிண்டே பிரிவினரும் மும்பை மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலரான முர்ஜி படேலை இடைத்தேர்தலில் நிறுத்தியுள்ளனர். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி மறைந்த லட்கேவின் மனைவி ருதுஜா லட்கேவை களமிறக்க வாய்ப்புள்ளது. இது தொடர்பாக புனேவில் செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், "இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை தனது கட்சி ஆதரிக்கும்" என்றார்.
அந்தேரி கிழக்கு சட்டப்பேரவை தொகுதி, மும்பை புறநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள 26 தொகுதிகளில் ஒன்றாகும். இது மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது.
மறைந்த லட்கே 2014 இல் காங்கிரஸிலிருந்து இந்தத் தொகுதியை கைப்பற்றினார். 2009இல், காங்கிரஸின் சுரேஷ் ஷெட்டி இந்த தொகுதியில் வெற்றிபெற்றார்.
மொத்தமாக, ஆறு மாநிலங்களில் உள்ள ஏழு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 3ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. நவம்பர் 6ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது. பீகாரில் இரண்டு தொகுதிகளிலும், மகாராஷ்டிரா, ஹரியானா, தெலங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் ஒடிசாவில் தலா ஒரு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
பீகாரில் மொகாமா மற்றும் கோபால்கஞ்ச் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஹரியானாவில் அடம்பூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தெலங்கானாவில் முனுகோட் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஒடிசாவில் கோலா கோக்ரநாத் மற்றும் தாம்நகர் (தனி) ஆகிய இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறும்.