Raj Kaushal Death : கணவர் இறுதிச்சடங்கில் ஜீன்ஸ் பேண்ட்; மந்திரா பேடியைத் தாக்கும் நெட்டிசன்கள் கவனத்துக்கு!
தனது குடும்பத்தைக் கொண்டாடித் தீர்த்தவர் ராஜ் கௌஷால். அந்த மனிதருக்குக் கொள்ளிவைக்க மந்திராவின் 25 வருடக் காதலுக்கு என்ன உரிமை இருக்கிறது எனக் கேள்வி எழுப்பியுள்ளன சமூக வலைத்தளக் கமெண்ட்கள்.
இயக்குநரும் நடிகை மந்திரா பேடியின் கணவருமான ராஜ் கௌஷால் நேற்று மும்பை பாந்திராவில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் காலமானார். கழுத்து நரம்புகள் புடைக்கக் கதறி அழுதபடி மந்திரா பேடி, ராஜ் கௌஷாலை இறுதியாகத் தூக்கிச் செல்லும் புகைப்படங்கள் ஆன்லைனில் வைரலாகி வருகின்றன. தனது கணவருக்கான இறுதிச் சடங்குகள் அனைத்தையும் தானே செய்துள்ளார் மந்திரா. ராஜ்க்கான இறுதி சடங்குகளை வெள்ளை உடை ஜீன்ஸ் அணிந்தபடி மந்திரா செய்ததுதான் தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. ஒன்று, ஒரு பெண் எப்படி இறுதிச் சடங்குகளைச் செய்யலாம் என்பது. மற்றொன்று ஜீன்ஸ் பேண்ட் அணிந்து எவ்வாறு இறுதிச் சடங்கு செய்யலாம் என்பது.
தேற்றவே முடியாமல் பார்ப்பவரிடமெல்லாம் கதறி அழுகிறார் மந்திரா. 25 வருடக் காதல், எது சொல்லியும் இந்த எதிர்பாராத இழப்பை ஈடுகட்ட முடியாதுதான். 1996ல் ஒரு திரைப்படத்துக்கான ஆடிஷனில்தான் முதன்முதலில் மந்திராவைச் சந்தித்தார் கௌஷால். இருவரும் எதிரெதிர் துருவங்கள். பார்த்ததுமே ஈர்ப்பு. மூன்றாவது டேட்டிங்கிலேயே இவள்தான் மனைவி என முடிவெடுத்திருந்தார் கௌஷால். மந்திராவைப் பொருத்தவரை ராஜ் மிகவும் சிம்பிளான நேர்மையான மனிதர். ராஜ்க்கு மந்திரா இண்டெலிஜெண்ட் அழகி.
1999ல் காதலர் தினத்தன்று காதலர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். 2011ல் பிறந்த மகன் வீர், தத்துக் குழந்தை தாரா என இருவரின் காதலும் கொள்ளமுடியாத அளவுக்குப் பெருகியிருந்தது. தனது குடும்பத்தைக் கொண்டாடித் தீர்த்தவர் ராஜ் என்பதற்கு அவரது இன்ஸ்டாகிராம் பக்கமே சாட்சி. அந்த மனிதருக்குக் கொள்ளிவைக்க 25 வருடக் காதலுக்கு என்ன உரிமை இருக்கிறது எனக் கேள்வி எழுப்பியுள்ளன சமூக வலைத்தளக் கமெண்ட்கள்.
இந்து மத நூலான கருட புராணம் ஆண்கள் முதன்மை துக்கம் அனுசரிப்பவராக வீட்டில் இறந்தவரின் இறுதிச்சடங்குகளைச் செய்யலாம் எனக் குறிப்பிடுகிறது. ஆனால் பெண்கள் செய்யவே கூடாது என அது எங்கும் குறிப்பிடவில்லை. அந்த நூலின்படி பெண்கள் தங்களை ஆணாகக் கருதிக்கொண்டு இறுதிச் சடங்குகளைச் செய்யலாம். ஆனால் காலப்போக்கில் அரைகுறை ஆணாதிக்கத்தின் தாக்கம் ’வீடுவரை உறவு வீதிவரை மனைவி’ என வீட்டின் தெருமுனைவரை மட்டுமே இறந்தவர்களுடன் பெண்கள் இறுதியாத்திரை வருவதற்கு அனுமதித்திருந்தது.
ஆனால் இதுபோன்ற ஆதிக்கங்களை உடைத்தெரிவதை பெரிதும் ஆர்ப்பாட்டமில்லாமல் அவ்வப்போது நிகழ்த்திவருகிறார்கள் நம் பெண்கள். ஆதிக்கம் வகுத்த அப்படியான தேவையற்ற ஆணியைதான் தற்போது தகர்த்திருக்கிறார் மந்திரா. தனது அன்புக்குரியவர்களுக்குப் பெண்கள் இறுதிச் சடங்கு செய்வது இந்திய பண்பாட்டு வரலாற்றில் இது முதன்முறையல்ல. புகழ்பெற்ற நாட்டியக்கலைஞர் ம்ருணாலினி சாராபாய் இறந்தபோது அவரது மகள் மல்லிகா சாராபாய்தான் முழு இறுதி சடங்கையும் முந்நின்று செய்தார்.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இறந்தபோது அவருக்கு இறுதிச் சடங்கு செய்தது அவருடைய தத்து மகள். உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுப் பெண் ஒருவர் இறந்தபோது அவரை இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றது அவருடைய நான்கு மருமகள்கள். சென்னையைச் சேர்ந்த ப்ரவீனா சாலமன் இறுதிச் சடங்குகளைச் செய்யும் மின் மயானத்தையே நடத்தி வருகிறார்.
இறுதிச் சடங்குகளுக்கு மதம் சாதி பாலினம் தேவைப்படுவதில்லை. அது நம்மோடு அதுவரைப் பயணித்தவர்களை இறுதியாக ஒருமுறை முத்தமிட்டு வழியனுப்பி வைப்பது. அது ஆண்பால், ஆடைவித்தியாசம் பார்க்காது. மனிதன் பிறப்புக்குக் காரணமானவள் அவன் இறப்பில் வழியனுப்பத் தகுதியற்றவள் என்பதை விட அடிமுட்டாள் வாதம் வேறு இருக்க முடியாது.
Also Read: ஒன்றிய அரசு என கூறுவதற்கு தடைவிதிக்க முடியாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை திட்டவட்டம்