"இது அதிகார துஷ்பிரயோகம்" சந்தா கோச்சார் வழக்கில் சிபிஐ-யை லெப்ட் ரைட் வாங்கிய மும்பை உயர் நீதிமன்றம்!
சந்தா கோச்சார், தீபக் கோச்சார் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் யோசிக்காமல் கைது செய்துள்ளனர் என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் வழங்கிய விவகாரத்தில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான சந்தா கோச்சாரையும் அவரது கணவர் தீபக் கோச்சாரையும் சிபிஐ கைது செய்தது அதிகார துஷ்பிரயோகத்திற்கு இணையானது என மும்பை உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.
முறைகேட்டில் ஈடுபட்டதா ஐசிஐசிஐ வங்கி?
கடந்த 2012ஆம் ஆண்டு, ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநராக சந்தா கோச்சார் இருந்தபோது, வீடியோகான் நிறுவனத்திற்கு 3,250 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது. கடன் அளிக்கப்பட்டதில் பல முறைகேடுகள் இருந்ததாக புகார் எழுந்தது. வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் அளிக்கப்பட்டதால் சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பயன் அடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதாவது, ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநராக சந்தா கோச்சார் இருந்தபோது, வீடியோகான் குழுமத்திற்கு அவர் கடன் வழங்கியுள்ளார். இதற்கு பிரதிபலனாக சந்தா கோச்சாரின் கணவர் நிறுவனமான வீடியோகான் நிறுவனம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனத்தில் முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது.
வீடியோகான் நிறுவனத்திற்கு ஐசிஐசிஐ வங்கி அளித்த கடன், வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது. மேலும், வங்கி மோசடியாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2022ஆம் ஆண்டு, டிசம்பர் 24ஆம் தேதி, மோசடி மற்றும் முறைகேடு புகாரில் சந்தா கோச்சார் மற்றும் தீபக் கோச்சார் ஆகியோர் சிபிஐயால் கைது செய்யப்பட்டனர்.
சிபிஐ மீது மும்பை உயர் நீதிமன்றம் காட்டம்:
முதற்கட்ட சிபிஐ காவலுக்குப் பிறகு, அவர்களை டிசம்பர் 29ஆம் தேதி நீதிமன்றக் காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. தங்களை கைது செய்தது சட்ட விரோதம் என்றும் விடுதலை செய்யக் கோரியும் வழக்கை ரத்து செய்யக் கோரியும் சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்தாண்டு ஜனவரி 9ஆம் தேதி, அவர்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில், சந்தா கோச்சாருக்கும் தீபக் கோச்சாருக்கும் வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை மும்பை உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. அதுமட்டும் இன்றி, கைது நடவடிக்கை மேற்கொண்ட சிபிஐ-யை நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.
சந்தா கோச்சார், தீபக் கோச்சார் ஆகியோரை யோசிக்காமல் கைது செய்துள்ளனர் என்றும் இது அதிகார துஷ்பிரயோகத்திற்கு இணையானது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். "விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்ட கூடுதல் பொருட்களின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
சட்டத்தை கருத்தில் கொள்ளாமல் இப்படி கைது செய்யப்பட்டிருப்பது அதிகார துஷ்பிரயோகத்திற்கு இணையானது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) பிரிவு 41A-ஐ பதிவு செய்யும் தேவை எங்கிருந்து வந்தது. இந்த சட்டப்பிரிவு இல்லாத பட்சத்தில், கைது தேவையற்றதாகிவிடுகிறது. கைது செய்தது சட்டவிரோதம்" என நீதிபதிகள் அனுஜா பிரபுதேசாய் மற்றும் என். ஆர். போர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.