Bombay High Court: திருமணம் மீறிய உறவில் கணவன்.. மனைவியின் புகாரை ரத்து செய்த உயர்நீதிமன்றம்.. ஏன்?
கணவனுக்கு எதிரான புகாரில், மும்பை நீதிமன்றம் மனைவியின் புகாரை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு மீறிய உறவு என கணவன் மீது மனைவி கொடுத்த புகாரை மும்பை நீதிமன்றம் ரத்து செய்தது.
2016-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அந்த பெண், தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் பழகி வந்ததாகவும், இதனால் கணவனும் அவரது குடும்பத்தினரும் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக 2022 ஆம் ஆண்டு சுர்கானா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்திய தண்டனைச் சட்டம் 498A (கணவன் மற்றும் அவரது உறவினர்கள் துன்புறுத்துவது), 409 (குற்றவியல் நம்பிக்கை மீறல்), 323 (உடல் ரீதியாக துன்புறுத்துவது), 504 (அமைதியை குலைக்கும் வகையில் நடந்துகொள்வது) மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து வழக்கு விசாரணையின்போது கணவன் பழகி வந்த பெண் சார்பாக வழக்கறிஞர்கள் அபிஷேக் குல்கர்னி மற்றும் சாகர் வக்காளே ஆகியோர் அஜரானார்கள். அப்போது, கணவன் பழகி வந்த பெண் கணவனின் உறவினர் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டது. பின் எஃப்.ஐ.ஆரில் தனது கணவன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பதாகவும், இதனால் அடிக்கடி இருவருக்குள் சண்டை வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதை குல்கர்னி சுட்டிக்காட்டினார். அப்போது புகார் அளித்த பெண் தரப்பில், கணவருக்கு வாட்ஸ்அப்பில் தொடர்ந்து மெசேஜ் வருவதாகவும், தன்னை விவாகரத்து செய்ய அந்த பெண் வற்புறுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ”கணவன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பதாக மட்டுமே புகார் அளிக்கப்பட்டுள்ளது. எப்.ஐ.ஆரில் உள்ள குற்றச்சாட்டுகள் முழுவதுமாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அந்த பெண் கணவரின் உறவினர் இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில், கொடுமைப்படுத்தியதாக, கிரிமினல் வழக்கை போடுவது சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வது ஆகும்” என தெரிவிக்கப்பட்டு அந்த புகாரை ரத்து செய்தனர்.