இந்தியாவில் 3 நாள்களில் 12 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. என்னதான் நடக்கிறது?
கடந்த 3 நாள்களில் 12 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு செல்லும் ஆகாசா ஏர் விமானத்துக்கும், டெல்லி செல்லும் இண்டிகோ விமானத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 3 நாள்களில் 12 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் பேசுகையில், "QP 1335 என்ற விமானத்தில் 3 கைக்குழந்தைகள் மற்றும் ஏழு பணியாளர்கள் உட்பட 177 பேர் இருந்தனர். தற்போது, விமானம் டெல்லிக்கு திரும்பியுள்ளது" என்றார்.
விமானங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்:
இண்டிகோ விமானத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து பேசிய அதன் செய்தித்தொடர்பாளர், "மும்பையில் இருந்து டெல்லி செல்லவிருந்த 6E 651 இண்டிகோ விமானம் அகமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டது. விமானம் தனிமைப்படுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர்" என்றார்.
டெல்லி-சிகாகோ ஏர் இந்தியா விமானத்தை தவிர, தம்மம் - லக்னோ இண்டிகோ விமானம், அயோத்தி-பெங்களூரு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், தர்பங்காவிலிருந்து மும்பைக்கு செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் (SG116), பாக்டோக்ரா பெங்களூரு (QP 1373) அலையன்ஸ் ஏர் விமானம், அமிர்தசரஸ்-டேராடூன்-டெல்லி விமானம் (9I 650), ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (IX 684), மதுரை - சிங்கப்பூர் உள்ளிட்ட விமானங்களுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
என்னதான் நடக்கிறது?
இரண்டு இண்டிகோ மற்றும் ஒரு ஏர் இந்தியா விமானத்திற்கு நேற்று முன்தினம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மும்பையிலிருந்து நியூயார்க்கின் JFK விமான நிலையத்திற்கு செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் AI119, மஸ்கட் செல்லும் இண்டிகோ விமானம் 6E1275, ஜெட்டாவுக்குச் செல்லும் 6E56 விமானம் ஆகிய விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் காலை 11 மணிக்கு கூடியது. இதற்கு முன்னதாக, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் டிஜிசிஏ அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.
கடந்த மாதம், டெல்லி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக இமெயில் மூலம் வந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், அது பொய்யான தகவல் என்பது கண்டறியப்பட்டது.