Kashmir Bomb: கல்லூரி அருகே கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு.. சுதந்திர தினத்தையொட்டி காஷ்மீரில் உச்சக்கட்ட பதற்றம்
ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் இன்று ஐஇடி வகை வெடிகுண்டுகளை கண்டுபிடித்து அதை செயலிழக்க செய்துள்ளனர்.
உளவுத்துறை எச்சரிக்கை:
இந்தியாவின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி நாளை தேசியக் கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இந்தாண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு 1,800 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
அரசு நிர்வாகத்தில் பொது மக்களின் பங்கேற்பை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிறப்பாக நிர்வகிக்கப்படும் கிராமங்களின் தலைவர்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் மற்றும் பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா ஆகியவற்றின் கீழ் பயன் பெறும் பயனாளிகள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
இதையொட்டி, டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் நாச வேலையில் ஈடுபடலாம் என்பதால் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தவும், அனைவரும் கவனமாக இருக்கும்படியும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் கல்லூரி அருகே வெடிகுண்டு கண்டெடுப்பு:
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் இன்று ஐஇடி வகை வெடிகுண்டுகளை கண்டுபிடித்து அதை செயலிழக்க செய்துள்ளனர். இதுகுறிதத்து அதிகாரிகள் கூறுகையில், "பாரமுல்லா மாவட்டத்தின் கனிஸ்போரா பகுதியில் உள்ள ஒரு கல்லூரிக்கு அருகே ராணுவம் மற்றும் காவல்துறையின் ரோந்துக் குழு ஒரு பையை கண்டெடுத்தது. அதில், ஐஇடி வகை வெடிகுண்டு இருந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழு வரவழைக்கப்பட்டனர். இதை தொடர்ந்து, அவர்கள் குண்டை செயலிழக்க செய்தனர்" என்றார்.
முன்னதாக, வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹீரி என்ற இடத்தில் சாலையோரம் சந்தேகத்திற்கிடமான பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "பையில் இருந்து வெடிகுண்டு மீட்கப்பட்டது. பின்னர், அதை வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழு செயலிழக்க செய்தனர்" என்றனர்.
பாதுகாப்பு வளையத்தில் நாட்டின் முக்கிய நகரங்கள்:
அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் சுதந்திர தின கொண்டாட்டம் ஏற்கனவே களைகட்ட தொடங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் நேற்று பிரம்மாண்ட பேரணிகள் நடத்தப்பட்டன.
கடந்த ஜூலை 26 முதல் செங்கோட்டை வளாகம் எஸ்பிஜி (சிறப்பு பாதுகாப்பு படை) பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு 10,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய இடங்களில் 1,000க்கும் மேற்பட்ட அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து, டெல்லியில் பேருந்து, ரயில் நிலையங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.