
மணிப்பூர் இனக்கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மொத்தமாக அடக்கம்! கண்ணீர் அலையில் உறவினர்கள்
இனக்கலவரத்தில் கொல்லப்பட்ட குக்கி சமூகத்தை சேர்ந்த 87 பேரின் உடல்கள் சுராசந்த்பூர் மாவட்டத்தில் இன்று மொத்தமாக அடக்கம் செய்யப்பட்டது.

மணிப்பூரில் கடந்த 7 மாதங்களாக நடந்து வரும் இனக்கலவரம் இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. பெரும்பான்மை மெய்தி சமூக மக்களுக்கும் பழங்குடி குக்கி சமூக மக்களுக்கும் இடையே நடந்த இனக்கலவரம் இந்திய வரலாற்றின் மோசமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இந்த இனக்கலவரத்தின் காரணமாக இதுவரை 180 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வெளி இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளன. தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி மெய்தி சமூக மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மே மாதம் பழங்குடியினர் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் வன்முறை வெடிக்க, மணிப்பூர் முழுவதும் கலவரம் பற்றி கொண்டது.
மணிப்பூர் இனக்கலவரம்:
மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாக மாநில அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. ஆனால், பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவது, மாணவர்களை கடத்தி கொடூரமாக கொலை செய்வது என தினந்தோறும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் இருக்கிறது.
இந்த நிலையில், இனக்கலவரத்தில் கொல்லப்பட்ட குக்கி சமூகத்தை சேர்ந்த 87 பேரின் உடல்கள் சுராசந்த்பூர் மாவட்டத்தில் நேற்று மொத்தமாக அடக்கம் செய்யப்பட்டது. செக்கன் பகுதியில் குக்கி தியாகிகள் கல்லறை என பெயரிடப்பட்ட இடத்தில், கிறிஸ்தவ சடங்குகளுடன் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.
வான் நோக்கி கிராம பாதுகாப்பு தன்னார்வலர்கள் துப்பாக்கியால் சுட்டு மரியாதை செலுத்தினர். உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். உடல்கள் அடக்கம் செய்யப்படும்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விடும் காட்சிகள் பார்ப்போர் மனதை உலுக்கும் வகையில் உள்ளது.
வன்முறையில் மரணித்தவர்களின் உடல்கள் மொத்தமாக அடக்கம்:
மனித உரிமைகளுக்கான குக்கி பெண்கள் அமைப்பின் தலைவர் என்கைனிகிம், இதுகுறித்து கூறுகையில், "எங்களுடைய பல சகோதர சகோதரிகளின் உடல்கள் நமது பழக்கவழக்கங்கள், சடங்குகளின்படி அடக்கம் செய்யப்பட்டதால் ஆழ்ந்த நிம்மதியை உணர்கிறோம். அன்பானவர்களை இழந்த உறுவினர்கள், இதற்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். கொல்லப்பட்ட மக்களின் நீதிக்கான போராட்டம் தொடரும். குக்கி - சோ மக்களுக்கு தனி நிர்வாகம் கோரும் போராட்டமும் தொடரும்" என்றார்.
சமீபத்தில், குக்கி மற்றும் ஜோமி சமூகத்தை சேர்ந்தவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில், கிட்டத்தட்ட 30 பேர் காயமடைந்ததால் பிப்ரவரி 18 வரை இரண்டு மாத காலத்திற்கு மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில், பலத்த பாதுகாப்புக்கிடையே உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. உச்ச நீதிமன்றத்தின் அனுமதியை தொடர்ந்து, இந்த மாதத்தின் தொடக்கத்தில் முதற்கட்டமாக 64 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

