கார்ப்பரேட்கள்தான் எல்லாம்.. நன்கொடை மழையில் பாஜக.. போட்டி போட்டு காசு கொடுத்த முதலாளிகள்
கடந்த 2023 முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், 8,358 பேரிடம் இருந்து மொத்தம் 2,243 கோடி ரூபாயை நன்கொடையாக பெற்றுள்ளது பாஜக. குறிப்பாக, பெரும்பாலான நன்கொடை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து வந்துள்ளது.

தேசிய கட்சிகளிலேயே அதிக நன்கொடை பெற்ற கட்சியாக பாஜக மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 2023 முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், 8,358 பேரிடம் இருந்து மொத்தம் 2,243 கோடி ரூபாயை நன்கொடையாக பெற்றுள்ளது பாஜக. குறிப்பாக, பெரும்பாலான நன்கொடை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து வந்துள்ளது. தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் சமர்பிக்கும் விவரங்களின் அடிப்படையில் இந்த டேட்டாவை தயார் செய்து வெளியிட்டுள்ளது ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR).
அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரம்:
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reforms) என்ற அரசு சாரா அமைப்பு, அரசியல் கட்சிகள், எம்பி, எம்எல்ஏக்கள் தொடர்பான முக்கிய விவரங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடை தொடர்பான விவரத்தை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 2023-24 நிதியாண்டில், தேசிய கட்சிகளிலேயே அதிக நன்கொடுமை பெற்ற கட்சியாக பாஜக உள்ளதாக ADR அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8,358 பேரிடம் இருந்து மொத்தம் 2,243 கோடி ரூபாயை நன்கொடையாக பெற்றுள்ளது.
இது, கடந்த 2022-23 நிதியாண்டை காட்டிலும் 211 சதவிகிதம் அதிகம். கடந்த 2022 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில், 719.858 கோடி ரூபாய் நன்கொடை பெற்ற பாஜக, 2023-24 காலக்கட்டத்தில் 2,243 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது.
பாஜகவுக்கு போட்டி போட்டு காசு கொடுத்த முதலாளிகள்:
இதே காலக்கட்டத்தில், காங்கிரஸ் கட்சி பெற்ற நன்கொடையும் உயர்ந்துள்ளது. 2022–23 ஆம் ஆண்டில் 79.924 கோடி ரூபாயாக இருந்த காங்கிரஸ் கட்சியின் நன்கொடை, 2023–24 ஆம் ஆண்டில், 281.48 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 252.18% அதிகமாகும். 20,000 ரூபாய்க்கு மேல் கொடுக்கப்பட்ட அரசியல் நன்கொடைகளின் அடிப்படையில் இந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய கட்சிகள் மொத்தமாக 12,547 பேரிடமிருந்து ரூ. 2,544.28 கோடி நன்கொடை பெற்றதாக அறிவித்திருக்கின்றன. இது முந்தைய ஆண்டை விட 199 சதவிகிதம் அதிகம். இந்த 12,547 பேரில் 3,755 கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து வந்தவை. இவர்கள் மட்டும், 2,262.55 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளன. மொத்த நன்கொடையில் 88.92 சதவிகிதம் கார்ப்பரேட் நிறுவனங்கள் அளித்துள்ளன.
மீதமுள்ள 8,493 பேர் தனிநபர் நன்கொடையாளர்கள் ஆவர். இவர்கள், 270.872 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளனர். அதாவது மொத்த நன்கொடையில் தனிநபர்கள் அளித்தது 10.64 சதவிகிதம் மட்டுமே. 3,478 கார்ப்பரேட் நிறுவனங்கள், பாஜகவுக்கு மொத்தம் 2,064.58 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளன. அளிக்கப்பட்ட மொத்த நன்கொடையில் பாஜகவுக்கே மட்டும் 88 சதவிகிதம் சென்றுள்ளது.
புரூடென்ட் எலெக்டோரல் டிரஸ்ட் என்ற நிறுவனம்தான் அதிக அளவில் நன்கொடை அளித்துள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டிற்கும் அந்நிறுவனம் மொத்தம் ரூ.880 கோடியை நன்கொடையாக வழங்கியது. பாஜகவுக்கு மட்டும் 723.675 கோடி வழங்கியுள்ளது. காங்கிரஸ்க்கு 156.4025 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.





















