பாஜகவுக்கு புதிய தேசிய தலைவரா? தேர்தல் காரணமாக புதிய வியூகம்...பிரதமர் மோடியின் பிளான் இதுதான்...!
பாஜக விதிகளின்படி, தலைவருக்கு மூன்று ஆண்டுகள் பதவிக்காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருவர் தொடர்ந்து இரண்டு முறை அதாவது 6 ஆண்டுகள் தலைவராக பதவி வகிக்காலம்.
பாஜகவில் தலைவர் பதவிக்கு என நிறைய அதிகாரங்கள் உள்ளன. தற்போது, அதன் தலைவராக இருப்பவர் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஜெ.பி. நட்டா. இவர், கடந்த 2020ஆம் ஆண்டு முதல் தலைவராக பதவி வகித்து வருகிறார். முன்னதாக, அமித் ஷா தலைவராக பதவி வகித்து வந்தார்.
ஆனால், பாஜக விதிகளின்படி ஒருவர் இரு பதவியில் தொடர முடியாத காரணத்தால், அவர் மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டதை தொடர்ந்து தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
பாஜக விதிகளின்படி, தலைவருக்கு மூன்று ஆண்டுகள் பதவிக்காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருவர் தொடர்ந்து இரண்டு முறை அதாவது 6 ஆண்டுகள் தலைவராக பதவி வகிக்காலம். அவரது மூன்றாண்டு பதவிக்காலம் வரும் ஜனவரியுடன் நிறைவடைய உள்ளதால், அவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 2024ஆம் ஆண்டு, மக்களவை தேர்தல் வரை, அவர் தலைவராக பதவி வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது தற்போதைய பதவிக்காலத்தை நீட்டிக்கும் வகையில் அடுத்த மாதம் கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது.
பாஜகவை பொறுத்தவரை, தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் கட்சியின் அமைப்பு தேர்தலை நடத்த வேண்டும். ஆனால், தற்போது வரை தேர்தல் நடத்தப்படாத காரணத்தால் அவரின் தற்போத பதவிக்காமல் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
அடுத்த மாதம், பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது. அதில், பல்வேறு மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தலில் பின்பற்ற வேண்டிய வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டத்தில் மக்களவை மற்றும் மாநில தேர்தல்களை காரணம் காட்டி அமைப்பு தேர்தலை ஒத்திவைக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது. அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கு முன்பு பல்வேறு மாநிலங்களில் பாஜகவின் உள்கட்சி தேர்தலை முடிக்க வேண்டும்.
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் நல்ல உறவை நட்டா பேணி வருகிறார். அமித் ஷா, தலைமையின் கீழ் முக்கியத்துவம் வாய்ந்த உத்தர பிரதேச தேர்தலில் வெற்றிபெற்றது போலவே நட்டா தலைமையில் அங்கு மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது பாஜக.
அதேபோல, உத்தரகாண்ட், கோவா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களிலும் நட்டா தலைமையில் பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது.
பாஜகவின் மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் தலைவர் பதவியில் இருந்துள்ளனர். அதேபோல, வெங்கையா நாயுடு, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோரும் தலைவராக பதவி வகித்துள்ளனர்.
தமிழ்நாட்டை சேர்ந்த ஜன கிருஷ்ணமூர்த்தியும் தலைவராக பதவி வகித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.